நீ பரீட்சிக்கப்பட்டு சோதனைகளைக் கடந்துபோயிருக்கிறாயா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
விசுவாசம்: ஆண்டவருடைய அற்புதம் நமக்காகக் காத்திருக்கிறது. அங்கு நாம் ஒரு புதிய பரிமாணத்திற்குள் நுழைகிறோம். அது என்னவென்றால், அவரால் மட்டுமே எல்லாம் கூடும் என்கிற பரிமாணம்தான். இந்தப் பரிமாணத்தில்தான் ஆண்டவர் செயல்படுகிறார். இந்தப் பாதையில்தான் முன்னோக்கிச் செல்லும் அதிசயமான வழிகள் உருவாகின்றன.
உனக்கு நினைவிருக்கிறதா, தன் மகன் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டதைப் பார்த்த அவனது தகப்பன், “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். (மாற்கு 9:24).
பிசாசினால் அலைக்கழிக்கப்பட்டவனின் தந்தைக்கும், அந்த மகனுக்கும் இந்தச் சூழ்நிலையில் இயேசு என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்: காரியங்கள் சரியாகவில்லை, மாறாக, அவை இன்னும் மோசமான நிலைமைக்குத் திரும்பியதைப்போலத் தெரிகிறது. வேதவாக்கியம் கூறுகிறது: “அவன் செத்தவன்போல் கிடந்தான்.” நிலைமை மேலும் மோசமடையும்படி எதிர்பாராத திருப்பத்தை அடைந்ததாக அங்குள்ள மக்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி மோசமடையவில்லை! அந்த வேதவாக்கியத்தின் முடிவில், “இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்” என்று கூறப்பட்டுள்ளது! (மாற்கு 9:25-27)
இயேசு கிரியை செய்யும்போது, காரியங்கள் நிலைகுலைந்து, அசைக்கப்படுகின்றன. அந்த நேரத்தில் உன் வாழ்க்கை அசைக்கப்படலாம், நீ சோதிக்கப்படலாம். நீ பயப்பட வேண்டாம் என்று நான் உன்னை ஊக்குவிக்கிறேன். மாறாக உன் கவலையையும், உனக்கு உண்டாகும் அவிசுவாசத்தையும், விசுவாசிப்பதில் உனக்கு ஏற்படுகிற சிரமத்தையும் ஆண்டவருடைய கரங்களில் விட்டுவிடு… உன்னை ஒருபோதும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல், உன்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அவரது கரங்களில் நீ விட்டுவிடு. அவர் தமது முகத்தை உனக்கு மறைக்க மாட்டார்… அவரது அன்பின் கரங்களால் உன்னைச் சூழ்ந்துகொள்ளுவார்.
நான் இன்று உனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்… “ஆண்டவரே, இதோ இவரின் நிலைமை உமக்கு முன்னால் உள்ளது. இவருடைய நம்பிக்கையை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்! உமது ஜீவனை இவரது வாழ்க்கையில் ஊற்றுவீராக. ஜீவனற்ற பகுதிகளில் மீண்டும் ஜீவனைப் புகுத்துவீராக; இந்த நபரின் விசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் உயிர்ப்பிப்பீராக. மலைகளை நகர்த்தும் விசுவாசத்தையும், ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விசேஷித்த வல்லமையையும் இந்த நபருக்குக் கொடுப்பீராக. உமது விலையேறப்பெற்றதும் அற்புதமானதுமான நாமத்தில் நான் ஜெபம் செய்கிறேன், ஆமென்!”
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “…உங்களுக்கும் உங்களது ஊழியத்திற்கும் மிக்க நன்றி. நான் அமைதியாக இருப்பதைப்போல காணப்படலாம், ஆனால் உங்களது தினசரி ஊக்கமளிக்கும் மின்னஞ்சலை நான் எப்போதும் வாசிக்கிறேன் மற்றும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது முதன்முதலில் என் கம்ப்யூட்டர் திரையில் தோன்றிய நாள் என் நினைவுக்கு வருகிறது, அதில் உள்ள வார்த்தைகளால் நான் மிகவும் தொடப்பட்டேன், அது ஒவ்வொரு நாளும் ஒரு அதிசயம்தான் என்பதையும் ஆண்டவரால் கூடாதது எதுவும் இல்லை என்பதையும் நினைவூட்டுகிறது. அந்த நேரத்தில் நான் மிகவும் கவலைப்பட்டேன், பயந்தேன், எனக்குத் தெரிந்த ஒருவரின் அன்புக்குரியவருக்குக் கடுமையான நோய் (புற்றுநோய்) தாக்கியது. அவர் கல்லீரல், பெருங்குடல், நுரையீரல், கழுத்து மற்றும் தோள்பட்டை போன்ற இடங்களில் வேதனையை அனுபவித்து வந்தார். அதை யாரால் தாங்க முடியும்? முடிவு நெருங்கிவிட்டதுபோல் தெரிந்தது. ஏனென்றால் தப்பிச் செல்வதற்கான வழி எதுவும் இல்லை என்பதாகத் தோன்றியது, ஆனால் ஆண்டவர் ஒரு வழியை உருவாக்குவார் என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருந்தேன். அந்த நபர் போராடிக்கொண்டிருந்தார். அநேக நேரங்களில் நான் கைவிட்டுவிடலாம் என்று நினைத்தபோது, நிச்சயம் ஒரு அதிசயம் நடக்கும் என்றும், ஆண்டவர் ஒரு வழியை உருவாக்குவார் என்றும் எனக்கு நானே மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வதை உறுதிசெய்து வந்தேன்.
நான்/அந்த நபர் ஒரு அதிசயத்தைப் பெற்ற அன்றைய தினம் உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மின்னஞ்சல்தான் இது. “உன் பரமபிதா உனக்கு போதுமான பலனைத் தருகிறார்! இன்று சாத்தியமற்றது என்று எதுவுமில்லை, ஏனென்றால் அவர் சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார், திறமையற்றவர்களைத் திறமையுள்ளவர்களாக மாற்றுகிறார், பலவீனமானவர்களை பலமுள்ளவர்களாக்குகிறார். இது அவருடைய வார்த்தை, இன்றைய நாளுக்கான அவருடைய அற்புதம்!” அந்த நேரம் நான் மிகவும் அழுதேன். அவருடைய ஆவி எனக்குள் இருப்பதை உணர்ந்தேன். ஆண்டவர் சர்வவல்லமையுள்ளவர்! சகல துதியும் ஸ்தோத்திரமும் நம் ஆண்டவர் ஒருவருக்கே உரித்தாகுக! அந்த நபர் குணமடைந்துவிட்டார்! ஒவ்வொரு முறையும் இதைப் பற்றி எழுதும்போது, நடந்த எல்லாவற்றையும் நினைத்து அழுவதை என்னால் அடக்கிக்கொள்ள முடிவதில்லை. இது என்னால் விவரிக்க முடியாத ஒரு அதிசயம். இது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான். நான் ஆச்சரியத்தால் திளைத்துப்போனேன். எங்களுக்கான/எனக்கான அவரது சித்தத்துக்கு நேராய் என்னை வழிநடத்தும்படி நான் தேவனிடம் கேட்கிறேன். ஜயா, எங்கள் வாழ்விற்கு ஊக்கமளித்து, சத்துவத்தைப் பெருகப்பண்ணும் வார்த்தைகளைக் கொடுப்பதற்காக உங்களுக்கு நன்றி. ஆண்டவர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களது வாழ்விற்காய் நன்றி!” (ஜேனட்)