நிதானமாயிரு!
முகப்பு ›› அற்புதங்கள் ››
‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிக்கும் ஒரு நபர், சில சமயங்களில் தனது வாழ்க்கைத் திட்டங்கள் யாவும் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதாக ஒப்புக்கொண்டாள். நம்பிக்கையுடன் அப்பெண்மணி தனது கஷ்டத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டாள். “நான் திட்டங்களை உருவாக்குவதற்கு முன்னமே ஆண்டவர் எனக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறேன். எனக்கு நானே மனஅழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய ஒரு பழக்கம் என்னிடம் உள்ளது: நான் நினைக்கும் நேரத்தில் எப்படியாவது நான் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறேன், இறுதியில், எதுவும் திட்டமிட்டபடி நடக்காதபோது, நான் ஏமாற்றமடைகிறேன். அடிக்கடி, தோல்விகளைச் சந்தித்த பிறகுதான், நான் செயல்படும் முன், ஆண்டவரிடத்தில் என் திட்டங்களை ஒப்படைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். ஆண்டவர் எனக்கான சரியான திட்டங்களை ஏற்கனவே ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்றும், மனஅழுத்தத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை என்றும் நம்பி, என்னை நானே சமாதானப்படுத்த விரும்புகிறேன், ஆனால், அப்படிச் செய்ய இயலாதபடி எனக்கு நிறைய பிரச்சனை ஏற்படுகிறது” என்று அவள் என்னிடம் சொன்னாள்.
சில நேரங்களில், எல்லாவற்றையும் திட்டமிட்டு கட்டுப்படுத்துவது நம் சுபாவத்தில் இருப்பது உண்மைதான். நாம் திட்டங்களை உருவாக்குகிறோம், சில சமயங்களில் அத்தியாவசியமான விஷயத்தை மறந்துவிடுகிறோம்: அது ஆண்டவருக்கு சித்தமா என்பதை அறிந்து செயல்பட வேண்டும். நாம் தோல்வியடையும்போது, வேறு திசையில் செல்லத் தயங்குவதில்லை. நாம் எப்போதும் ஆண்டவரிடம் கேட்டு அறிந்துகொள்ள நேரம் செலவிடுவதில்லை.
இந்தத் தீவிரமான ஓட்டப் பந்தயத்தில், சில நிமிடங்கள் மட்டும் வேகத்தைக் குறைக்கவும், ஓய்வெடுக்கவும், நேரம் ஒதுக்கவும் உன்னை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.
இப்போது, நீ ஓய்வெடுக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும்? ஆண்டவர் தாமே இவ்வாறு செய்ய நம்மை அழைக்கிறார்: “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10)
நீ மீண்டும் முன்னேறத் துவங்குவதற்கு முன் ஏன் எல்லாவற்றையும் சில நிமிடங்களுக்கு நிறுத்திவைக்கக்கூடாது? இப்படி சற்று ஓய்வெடுக்க உன்னை அழைக்கிறேன்.
- உன் கைபேசியை அணை அல்லது அமைதி நிலையில் வை.
- மெதுவாக சுவாசிக்கவும், உன் தசைகளை தளர்த்தவும் நேரம் ஒதுக்கு.
- உனது உள்ளான பதற்றத்தை அமைதிப்படுத்து; உன் எண்ணங்களை சமாதான பிரபுவாகிய இயேசுவின் பக்கம் திருப்புவதன் மூலம் அவற்றை அமைதிப்படுத்தலாம்.
- ஆண்டவரிடத்தில் ஜெபித்து உனது சுமைகளையெல்லாம் அவரிடம் கொடுத்துவிடு.
அவர் ஆண்டவர் என்பதை அறிந்துகொள், அவர் ஒருவரே எல்லாவற்றிற்கும் மேலானவராய் இருக்கிறார், உன் முழு வாழ்க்கையும் அவர் கரங்களில் இருக்கிறது.
இப்படிச் செய்வது எனக்குப் பிரயோஜனமாய் இருக்கிறது, இது உனக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். சில வினாடிகள் நான் ஓய்வெடுக்கும்போது, என் உடல் தளர்ந்து என் இதயத்தில் உள்ள பதற்றம் நீங்கும். அத்துடன் இதைச் செய்வதன் மூலம், யாரோ ஒருவர் மீது எனக்கு இருந்த எரிச்சல்களும் கசப்புகளும் என்னிலிருந்து வெளியேறி விடுவதால், அவை அடிக்கடி அன்புக்கு நேராய் என்னை நடத்திச் செல்வதை நான் கவனித்தேன்.
ஓய்வெடுக்க நேரம் ஒதுக்கு. உன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆண்டவரை நினைவில் வைத்துக்கொள்ள அவர் உன்னை அழைக்கிறார்.
இது பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும் ஆலயமாகிய உன் சரீரத்துக்கு மட்டுமல்ல, இயேசு வசிக்கும் உன் இருதயத்திற்கும் பயனளிக்கும்!
இந்த நாள் ஆண்டவரது சமாதானம் நிறைந்த அற்புதமான ஒரு நாளாக அமையட்டும்.