சிக்கலான கேள்விகளுக்கு ஒரு அனுபவசாலியைப்போல பதில் அளிப்பது எப்படி?
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்: முதலில் வந்தது – கோழியா அல்லது முட்டையா? நீ ‘முட்டை’ என்று சொன்னால், ‘யார் முட்டையிட்டது?’ என்று நான் கேட்பேன். நீ ‘கோழி’ என்று சொன்னால், ‘கோழி எங்கிருந்து வந்தது?’ என்று கேட்பேன். சிக்கலானது, இல்லையா?
வேதாகமத்தில் ஒரு சிக்கலான கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய சூழலில் இருந்த ஒருவரைப் பற்றிப் பார்ப்போம் – அவன் பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாய் இருந்த ஒரு மனிதன்.
யோவான் 9ஆம் அத்தியாயத்தில், இந்த மனிதனைக் குணப்படுத்துவதன் மூலம் இயேசு தமது மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்றை எவ்வாறு செய்தார் என்பதை நாம் வாசிக்கலாம். இந்த மிகப்பெரிய நிகழ்வாகிய, ஓய்வுநாளில் செய்யப்பட்ட அதிசயமானது, உண்மையிலேயே ஆண்டவரிடமிருந்து வந்ததா என மதத் தலைவர்கள் மத்தியில் விவாதத்தை எழச் செய்தது.
இயேசுவின் ஊழியத்தால் ஏற்கனவே கோபத்தில் இருந்த பரிசேயர்கள், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் ஜெப ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கட்டுப்பாடு செய்திருந்தனர் (வசனம் 22). மதத் தலைவர்கள் அவனை அதே இடத்தில் வைத்து, இயேசு ஒரு பாவியா அல்லது தீர்க்கதரிசியா என்று சொல்லி அவனது கருத்தைக் கேட்டபோது, குணமடைந்த மனிதன் இக்கட்டான நிலையில் இருந்தான்.
அவனது பதில் அதிக ஞானமுள்ள பதிலாய் இருந்தது. அவன் இவ்வாறு பதில் அளித்தான்: “அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்!” (வசனம் 25). உன் விசுவாசத்தைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டால், நீ செய்யக்கூடிய புத்திசாலித்தனமான விஷயம் என்னவென்றால், உனக்குத் தெரிந்தவற்றை சார்ந்துகொள்வதுதான் — அதாவது, உன் சொந்த வாழ்க்கையில் ஆண்டவர் செய்த மாற்றத்திற்கான கிரியைகளை சார்ந்துகொள்வதுதான் சிறந்தது.
அதிகப்படியான மத நம்பிக்கையுள்ளவர்கள் அல்லது வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆண்டவரைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவது நமக்கு சோதனையாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். உன் சொந்த அனுபவங்களை யாரும் மறுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ முடியாது, ஏனெனில் உன் தனிப்பட்ட சாட்சிதான் உன்னிடம் உள்ள மிகவும் வல்லமை வாய்ந்த கருவி என்பதை நீ எப்போதும் நினைவில் வைத்துக்கொள்!
இந்த சம்பவம் இதுவரை எழுதப்பட்ட மகத்தான பாடல்களில் ஒன்றை எனக்கு நினைவூட்டுகிறது, இதுதான் அந்தப் பாடல்:
‘அற்புதமான தேவ கிருபை
எத்தனை இனிமை தேனாய்.’
இந்தப் பாடலைக் கேட்டு, ஆண்டவர் நமக்காகச் செய்த மகத்தான விஷயங்களைப் பற்றி தியானிப்போம். https://youtu.be/DIFY-zGH85s?si=8YSEfRsPSYg2J4gb