கடந்த காலமானது உன்னை முன்னேனறிச் செல்லவிடாமல் தடுக்கும்போது என்ன செய்வது…
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன் கடந்த கால வாழ்வு உன்னை முன்னேறவிடாமல் தடுக்கிறதா?
சில நேரங்களில், வாழ்ந்து காட்டுவதை விட வாசிப்பது எளிதாக இருக்கும் சில வசனங்கள் உள்ளன. பிலிப்பியர் 3:13-14 கூறுகிறது: “சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”
நாம் இதை இப்படிச் சுருக்கமாகக் கூறலாம்: இன்று, நான் பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடுகிறேன்!
“நான் கடந்த காலத்தை மறந்து, இனி அவற்றை நினைவில் வைக்காமல் இருக்கத் தீர்மானிக்கிறேன். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இப்போதைக்கு, நான் முன்னானவைகளை நோக்கியே பயணம் செய்ய இயலும்”
உண்மை என்னவென்றால், துரதிர்ஷ்டவசமாக, அதை அனுபவித்ததைவிட அதைப் பற்றி நாம் அதிகமாகப் பேசுவதுதான் நம்மைப் பின்னோக்கித் தள்ளுகிறது. நான் உனக்கு ஒரு உதாரணத்தை முன்வைக்கிறேன். நீ ஒரு உணவைத் தயார் செய்யும்போது, உன் விரலில் வெட்டுக்காயம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள், அந்தக் காயத்தை ஆற்றுவதற்கு, அது மீண்டும் பிளந்துவிடாமல் இருக்கும்படி, நீ அந்தக் காயத்தைக் கழுவி, துடைத்து, கிருமிகளின்றி சுத்தம் செய்து, அதன் மீது ஒரு கட்டு போடுகிறாய். பிறகு, நீ கட்டுகளைக் கழற்ற முடிவு செய்தவுடன், அந்தக் காயத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்க்க மாட்டாய் என்று நம்புகிறேன்!
ஏன் அப்படிச் செய்ய மாட்டாய்? ஏனென்றால் அது இன்னும் வலியை ஏற்படுத்துகிறது! ஒரு வடு முழுமையாக உருவாகும் முன் நீ அதைத் தொடுவாயானால், அது “குணமாகிவிட்டதைப்போலத்” தோன்றலாம்… ஆனால் மேல்தோலின் கீழ் உள்ள ஆழமான அடுக்குகளில், காயத்தை ஆற்றும் வேலை இன்னும் நடந்துகொண்டிருக்கும்.
இருப்பினும், சில சமயங்களில் நமது கடந்த காலத்தை நாம் மீண்டும் நினைவுகூருகிறோம். நாம் அதைத் “தொடுகிறோம்”; அதைப் பற்றிப் பேசுகிறோம். நம்மைத் தடுத்து நிறுத்திய குறிப்பிட்ட சூழ்நிலையைப் பற்றிப் பேசுவதை நிறுத்துவது என்பது எவ்வளவு கடினம்! உன்னைக் காயப்படுத்திய உன் முன்னாள் துணை, வஞ்சகமாக பதவி உயர்வு பெற்ற சக ஊழியர், பொருளாதார நிலைமை இறங்குமுகமாகச் சென்றது, கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரனாக முற்றிலும் நடந்துகொள்ளாத ஒரு திருச்சபை உறுப்பினர் என ஏராளமான காயங்கள் உனக்குள் இருக்கலாம். இது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது… நீ அதைக் கடந்து வந்துவிட்டதாகவும், அடுத்த காரியங்களை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டதாகவும் உணர்கிறாய். இருப்பினும், என்ன நடந்தது என்பது பற்றிய ஞாபகம் சிறிது வரும்போது, நீ மீண்டும் அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறாய்… அப்படிச் செய்வாயானால், குணப்படுத்தும் செயல்முறை தொடங்கிவிட்டபோதிலும், அது ஒருபோதும் முடிவடையாமல் போய்விடும்.
இதை உன்னால் சிந்தித்துப் பார்க்க முடிந்தால், எல்லாவற்றையும் ஆண்டவரிடம் திருப்பிக் கொடுத்துவிடும்படி நான் உன்னை அழைக்கிறேன், அவர் ஏற்கனவே உன் துக்கங்களை ஏற்றுக்கொண்டார், உனக்காக எல்லாவற்றையும் சுமந்துகொண்டார். அவர் உன்னைக் கடந்த கால காயங்களிலிருந்து விடுவிக்க விரும்புகிறார்! நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்… “பரிசுத்த ஆவியானவரே, என் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்த எனக்கு உதவுவீராக. இது மிகப்பெரிய சோதனையாக இருக்கிறது, அடிக்கடி நான் இந்தச் சோதனைக்குள் இழுக்கப்படுகிறேன். நான் என் நேரத்தைக் கடந்தகாலத்தை நினைவுகூருவதில் செலவிடுவதால், நன்றாக முன்னேறுவதற்கு சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். நீர் எனக்காகத் திட்டமிட்டுள்ள அசாதாரணமான வாழ்க்கையை நான் வாழும்படி, எனது கடந்த காலத்தின் காயங்களைக் குணப்படுத்துமாறு நான் ஜெபம் செய்கிறேன். நிகழ்காலத்தில் இங்கே, இப்போது எனக்காக நீர் வைத்திருக்கும் எதிர்கால நம்பிக்கைக்கான வாய்ப்புகளை எதிர்நோக்குகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”