உன்னை ஊக்குவிக்க கற்றுக்கொள்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
மற்றவர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம், ஆனால் நம்மை நாமே எவ்வாறு திறம்பட ஊக்குவிப்பது என்பது நமக்குத் தெரியுமா? அன்றாட மன அழுத்தங்கள் நிறைந்த இந்த உலகில் நம்மை நாமே ஊக்குவிப்பது எப்படி சாத்தியமாகும்?
தாவீது ராஜா அடிக்கடி துன்பத்தின் சூழ்நிலைகளை அனுபவித்தார், மேலும் அவரது மனஅழுத்தம் மிகப்பெரியதாக இருந்தது. ஒரு நாள், அவரும் அவரது ஆட்களும் மற்றொரு இராணுவப் பயணத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அவர்கள் இல்லாத அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவர்களின் எதிரிகள், அவர்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வங்களைத் திருடிச் சென்றுவிட்டனர் என்பதை அறிந்துகொண்டனர்.
மனமுடைந்து, கோபமடைந்த தாவீதின் தோழர்கள் தாவீதை கல்லெறிந்து கொன்று பழிவாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டனர். இருப்பினும், அவரும் அவர்களைப்போலவே அதே மனஅழுத்தங்களை அனுபவித்துக்கொண்டிருந்தார். ஆனால் தாவீது தனது மன அழுத்தங்களையும் புறம்பே இருந்து வந்த நெருக்கடிகளையும் மேற்கொள்ளும்படி கர்த்தர் மீது மாத்திரமே தன் கண்களை வைத்திருந்தார்!
இந்த நேரங்களில் மன அழுத்தம் உனக்குத் தீவிரமாக இருக்கும்:
- உன்னைச் சுற்றி யாரும் இல்லாத நேரங்களிலும்,
- உன்னை யாராலும் புரிந்துகொள்ள முடியாதபோதும்,
- எல்லோரும் உனக்கு எதிராக இருக்கும்போதும் மன அழுத்தம் உனக்குத் தீவிரமாக இருக்கும்.
இதுதான் ராஜாவைக் காப்பாற்றியது: “தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.” (1 சாமுவேல் 30:6) மற்றவர்கள் தங்கள் துயரத்தில் மூழ்கி பழிவாங்க முயன்றபோது, தன் பிரச்சனைகளைத் தீர்க்க, தாவீது தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டு, ஆண்டவரைத் தேடத் தீர்மானித்தார். “ஊக்குவித்தல்” என்பது தைரியம், உத்வேகம் மற்றும் தீர்மானத்தை மாற்றும் செயலாகும்.
இக்கட்டான சமயங்களில் நீ எவ்வாறு நடந்துகொள்கிறாய் என்பதுதான் வாழ்க்கையில் நீ பெறும் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கிறது. இக்கட்டான சமயங்களில் உன்னை ஊக்குவித்து பலப்படுத்திக்கொள்ளும் உனது திறனே, கர்த்தரோடு நீ கொண்டுள்ள நெருக்கத்தின் அளவிற்கு சான்றாக அமையும்.
தாவீது கைவிட்டிருந்தால், அவனிடமிருந்து பிசாசு திருடிச் சென்ற அனைத்தையும் அவன் ஒருபோதும் மீட்டுக்கொண்டு திரும்பி வந்திருக்க முடியாது. அவன் தன் மனதில் ஒடிக்கொண்டிருந்த ஊக்கமின்மை மற்றும் தோல்வியின் எண்ணங்களுக்கு அடிபணிந்திருந்தால், அவனை வெற்றியின் பாதைக்கு நேராக அழைத்துச் சென்ற ஊழியக்காரனை அவன் ஒருபோதும் சந்தித்திருக்கமாட்டான். (1 சாமுவேல் 30:8)
உன்னை எப்படி ஊக்கப்படுத்துவது என்பதை நீ அறிந்துகொள். நீ ஆண்டவரிடத்தில் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாயோ, அவ்வளவு நேர்மறையாகவும் வெற்றிகரமான நபராகவும் இருப்பாய் என்பதை அறிந்துகொள்! தேவைப்படும் நேரத்தில் உனக்கு உண்மையிலேயே உதவக்கூடிய ஒரே ஒருவரை நோக்கி உன் கவனத்தைத் திருப்பு. உன் வாழ்க்கைக்கான திட்டம் அவரிடம் மட்டுமே உண்டு!