உன் கவலைகள் மீது கவனம் செலுத்த வேண்டாம்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
நாம் கவனமாக இல்லாவிட்டால், நம் மனமும் உள்ளமும் “அதிக வெப்பமடையும்” என்பது உனக்குத் தெரியுமா? எரிந்துபோகும் அபாயமின்றி தொடர் மனஅழுத்தத்தில் வாழ்வது மிகவும் ஆபத்தானது.
இன்று, உன் ஆரோக்கியத்தின் பக்கமாக உன் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். ஓய்வெடுக்கக் கற்றுக்கொள்வதுபோன்ற, உன் சரீரப்பிரகாரமான ஆரோக்கியத்தின் பக்கமாக மட்டுமல்ல… உன் ஆத்துமாவையும் சிந்தனையையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்று பார்ப்போம். கர்த்தர் உன் வாழ்வில் இதைத்தான் விரும்புகிறார்: “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.” (3 யோவான் 1:2)
விளையாட்டுகளில் கலந்து விளையாடுவதன் மூலமும், சரிவிகித உணவை உண்பதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதன் மூலமும் உன் சரீரத்தைக் கவனித்துக்கொள்வது அவசியம் என்று நீ நினைக்கலாம். இருப்பினும், உன் மனதைக் கவனித்துக்கொள்வது அதைவிட இன்றியமையாதது என்று நீ நம்புகிறாயா?
- உனக்குப் பிடித்த வேலையில் சேருவது;
- வங்கி கணக்கில் எப்போதும் அதிக பணம் வைத்திருப்பது;
- ஆரோக்கியமான, சீரான உடல் ஆகிய இவற்றை நீ விரும்பலாம்;
ஆனால், உன் மனம் எதிர்மறையானவைகளை சிந்தித்துக்கொண்டிருந்தால், நீ நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதில் வெற்றி பெறமாட்டாய். நேர்மறையான வாழ்க்கையையும் எதிர்மறையான மனநிலையையும் நீ கொண்டிருக்க முடியாது.
உன் மனதிற்கு எதை உணவாக அளிக்கிறாய்? பொதுவாக ஒவ்வொரு நாளும், உன் வாழ்க்கையில் நீ அதிக நேர்மறையான காரியங்களை விரும்பினால், உன் எண்ணங்களை நீ சரிசெய்ய வேண்டும்.
ஒருசில எளிய ஆலோசனைகளை நான் உன்னோடு பகிர்ந்துகொள்ளலாமா?
- முதலில், உன் எண்ணங்களைக் கவனித்து அவற்றை உன் குறிப்பேட்டில் எழுது.
- உன் மனஅழுத்தங்களை சரிசெய்ய மேற்கொண்ட முயற்சியைப் போலவே, உன் ஒவ்வொரு எதிர்மறையான எண்ணத்துக்கும் அடுத்ததாக, எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றக் கூடிய ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களில் ஒன்றை எழுது.
- உன் கவலைகள் மீது கவனம் செலுத்தாமல், ஆண்டவர் மீது கவனம் செலுத்து. (பிலிப்பியர் 4:6-7)
- உன் எண்ணங்களை ஆரோக்கியமான சிந்தனைகளால் நிரப்பு. (பிலிப்பியர் 4:8)
பிறகு, இவ்வாறு ஒரு ஜெபத்தை ஏறெடு… “தகப்பனே, என் எண்ணங்களை நீர் அறிவீர்; நான் எப்போதும் அவைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பது உமக்குத் தெரியும். எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் அனைத்தையும் உமது வார்த்தையால் மாற்ற எனக்கு உதவுவீராக, ஏனென்றால், அப்படிச் செய்யும்போதுதான், நான் உமது இதயத்தை மகிழ்வித்து என் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
நீ ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார் – ஆவிக்குரிய ரீதியிலும், மனதளவிலும், சரீரப்பிரகாரமாகவும் நீ ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!
இது ஒரு அற்புதமான நாளாக உனக்கு அமைவதாக!