ஆண்டவருக்கு நீங்கள் உதவி செய்யவில்லை!
முகப்பு ›› அற்புதங்கள் ››
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த கடினமான காரியங்களில் ஒன்று எது? கடினமான பணிகள் அல்லது பெரிய சாதனைகளை நீங்கள் நினைவுகூரலாம், ஆனால் நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நான் செய்த மிகக் கடினமான காரியங்களில் ஒன்று, என்னை மிகவும் புண்படுத்தியவர்களை மன்னித்ததுதான். என் வாழ்க்கையில் என்னை ஆழமாகக் காயப்படுத்திய சிலர் உள்ளனர், அந்தக் குற்றங்களை மன்னித்து விட்டுவிடுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை.
உங்களுக்கும் அப்படித்தானே? அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரும் அப்படித்தான் உணர்கிறாரா?
மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13)
உங்களைப் புண்படுத்தும் ஒருவரை நீங்கள் மன்னிக்கும்போது, நீங்கள் அவர்களுக்கோ அல்லது ஆண்டவருக்கோ உதவி செய்யவில்லை. உங்களது நன்மைக்காகவே ஆண்டவர் இந்த அறிவுறுத்தலைக் கொடுத்தார்.
ஒருவேளை, ‘அவர்கள் என் மன்னிப்புக்கு தகுதியானவர்கள் அல்ல; அவர்கள் செய்ததை மன்னிக்க முடியாது!’ என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். இருப்பினும், அவர்களை மன்னிப்பது மிகவும் முக்கியமானது. ஏன்? ஏனென்றால், அவர்களை மன்னிப்பது உங்களுக்கு சுதந்திரத்தை தரும்!
“மன்னியாமை என்பது ஒருவர் விஷம் குடித்துவிட்டு மற்றவர் இறப்பதற்காக காத்திருப்பது போன்றது” – மரியான் வில்லியம்சன்
குற்றம் என்பது உங்கள் இதயத்தில் தீமையை விளைவிக்கும் ஒரு விதை போன்றது. நீங்கள் அதைப் பிடித்துக்கொண்டால், அது வேரூன்றிவிடும், மேலும் கசப்பு, கோபம் மற்றும் வெறுப்பு போன்ற மற்ற களைகள் வளர ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் மன்னிப்பதைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த விஷயங்களை வேரோடு பிடுங்கி எறிந்து, ஆண்டவர் உங்களுக்குள் நல்ல விஷயங்களை வளர்க்க இடமளிக்கிறீர்கள்.
இது வேத ஞானம் மட்டுமல்ல; இது ஒரு உளவியல் கொள்கையும் கூட. மன்னிப்பைப் பயிற்சி செய்வது நமது மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. (https://journals.sagepub.com/doi/abs/10.1177/1359105314544132) – இதுவும் ஒரு அதிசயம்!
உங்களைப் புண்படுத்தியவர்கள், அவர்களின் தவறுகள், குறிப்பாக உங்களால் இதுவரை மன்னிக்க முடியாதவர்கள் போன்றோரின் பட்டியலை உருவாக்குமாறு கேட்கிறேன். வரும் நாட்களில், எப்படி மன்னிக்க முயற்சிப்பது என்பதை நாம் இணைந்து தியானிப்போம். இது இப்போது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் என்னை நம்புங்கள், அது மிகவும் விலையேறப்பெற்றது!
![unnamed (7) unnamed (7)](https://tamil.jesus.net/wp-content/uploads/2022/03/unnamed-7.png)