ஊழியப்பணி சாத்தியமா அல்லது சாத்தியமற்றதா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஆண்டவர் உன்னைப் பார்த்து, “நான் உன்னை நம்பலாமா?” என்று கேள்வி கேட்டால் என்ன சொல்வாய்.
ஒருநாள், ஆபாசப்படங்களைப் பார்ப்பதிலிருந்து விடுதலை பெற, போராடிக்கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு நான் ஊழியம் செய்யவேண்டிய அவசியம் வந்தது, அதைச் செய்ய எனக்குத் தகுதியில்லை என்று நான் நினைத்தேன், என் பணி சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால் ஆண்டவர் அவருக்கு உதவ வேண்டும் என்று நான் விரும்பினேன். இயேசு என்னிடம், “என் ஆவி உன்மேல் வந்து அமரட்டும், இந்த இளைஞனுக்கான பதில்களை நான் உனக்குத் தருவேன்” என்று சொன்னார்.
சில நேரங்களில், ஆண்டவர் நம்மிடம் சொல்லும் காரியங்களைச் செய்வது “மிகவும் கடினம்” என்று தோன்றுகிறது. இயேசுவின் தாயான மரியாளுக்கும் அப்படித்தான் இருந்தது.
தேவதூதன் இயேசுவின் எதிர்கால பிறப்பை அவளுக்கு அறிவித்தபோது, அவள் எப்படி பதிலளித்தாள் என்பதை நாம் இங்கே காணலாம்: “அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.” (லூக்கா 1:34-35)
யோசேப்புடனான நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து மரியாளின் வாழ்க்கை அனைத்தும் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் ஆண்டவர் மற்றொரு பணியை முன்வைத்து அவளிடம் கேட்கிறார்: “நான் உன்னை நம்பி இதை ஒப்படைக்கலாமா? உனக்கு ஒரு குமாரன் பிறப்பான், உனக்கு சரியானதாகத் தோன்றும் நேரத்தில் அல்ல, நான் தெரிந்துகொண்ட நேரத்தில் அது நடக்கும். இது சரியான நேரத்தில் நடக்கும். நீ ஏற்றுக்கொண்டு விசுவாசித்தால், என் வல்லமையைக் காண்பாய்.”
உனக்கு “சாத்தியமற்றதாக” தோன்றும் காரியம், உன் வாழ்க்கையின் மூலம் ஆண்டவருடைய வல்லமையை வெளிப்படுத்துவதற்கு உனக்கு அளிக்கப்பட்ட பணியாகும். உன் விசுவாசம், ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் பரிசு, எனவே உனக்கான ஆண்டவருடைய பணியை ஏற்றுக்கொள். உன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க நினைக்காதே. தேவ ஆவியானவர் உன்னை நிரப்பி, இயேசுவைக் காணும்படி செய்யட்டும். விசுவாசம் என்பது ஆண்டவரை நம்புவதைத் தெரிந்துகொள்வதாகும். மேலும் ஆண்டவர் தம்மை நம்பியிருக்கும் நபர் மீது நம்பிக்கை வைக்கவே விரும்புகிறார்.
ஒருவேளை நீ இப்படிப்பட்ட சாத்தியமற்ற சூழ்நிலையில் இருக்கலாம்:
- உன் மனைவி ஆண்டவரை விசுவாசிக்கவில்லை.
- நீ நேசிக்கும் ஒரு நபர் அடிமைத்தனமான வாழ்க்கையில் விழுந்தார்.
- உன் சக ஊழியர்கள் அல்லது நண்பர்கள் உன்னை வெறுக்கிறார்கள்.
அப்படியானால் உனக்கு ஒருசில நல்ல செய்திகளைச் சொல்கிறேன். உனக்கு ஒரு ஊழியப்பணி இருக்கிறது!
கடினமான சூழ்நிலையில் தேவ குமாரனை மரியாளால் சுமக்க முடிந்தது என்றால், அவள் ஆண்டவரை விசுவாசித்ததுதான் காரணம். உன் ஊழியப்பணியில் உன் விசுவாசத்தால் தான் வெற்றி பெறுவாய்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக், இந்தப் புயல்கள் மூலம் எனது நங்கூரத்தைப் பற்றிய உங்கள் செய்திக்காக நன்றி சொல்கிறேன். குறிப்பாக என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், எனக்கு அந்தச் செய்தி மிகவும் வேண்டியதாய் இருந்தது. எனது குடும்பம் ஒன்றன்பின் ஒன்றாக கடும் புயல் போன்ற பிரச்சனைகளால் தாக்கப்பட்டு வருகிறது. மேலும் என்னால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை என எனக்குத் தோன்றியது. ஆனால் உங்கள் செய்தியின் மூலம், ஆண்டவர் என்னைப் பாதுகாக்கிறார் என்பதை நான் அறிவேன், இந்தப் புயல்களின் மத்தியில் இயேசு என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். நம்முடைய நங்கூரமான இயேசு கிறிஸ்துவை நாம் இறுகப் பற்றிக்கொள்ளும்வரை, நாம் அனைவரும் வெற்றி பெறுவோம். நன்றி.” (எபிநேசர், நாகைப்பட்டினம்)