உன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகிறதா? 😣
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்றும், சங்கீதம் 94:18-19 வரையுள்ள வசனங்களைப் பற்றிய சிறப்பு தியானத்தைத் நாம் தொடர்வோம்.
“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:18-19)
“என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில்” என்ற சொற்றொடரை நாம் தியானிப்போம். சில சமயங்களில் எதிர்மறையான எண்ணங்கள் உன் மனதைத் தீவிரமாக நிரப்புகிறதா? நீ பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்று எல்லா வழிகளிலும் ஆய்வு செய்துவிட்டாய், ஆனால் இன்னும் ஒரு தீர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லையா?
ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கும் ஒரு உறுதியான வாக்குத்தத்தம் இதோ: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7)
கிரேக்க மொழியில் “வைத்துவிடு” என்பதற்கு “தூக்கி எறிந்துவிடு” என்று அர்த்தமாகும். நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி, நீ இருக்கிற வண்ணமாகவே ஆண்டவருக்கு அருகில் வரலாம். உன் கவலைகளை மிகுந்த முயற்சியுடன் அவருடைய பாதத்திற்கு அருகில் வந்து வேதனையோடு வைத்தாலும் சரி, அவற்றை அவர் மீது வீசி எறிந்துவிட்டாலும் சரி, இதை அறிந்துகொள்: ஆண்டவரை நோக்கி நீ வீசி எறிந்தவைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்! உன் கவலைகளுடன் அவரிடம் வரத் தயங்காதே, ஏனென்றால் அவர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார். உன் பிரச்சனைகளுக்கு அவர் ஒரு தீர்வு வைத்திருக்கிறார், அவரே எல்லாவற்றிற்கும் தீர்வாக இருக்கிறார்.
கவலையால் நிரம்பிய இதயத்திற்குப் பதிலாக, சந்தோஷமான ஒரு இதயம், மகிழ்ச்சியால் நிரம்பிய ஒரு இதயத்தை தருகிறார் : அதுதான் ஆண்டவர் உனக்கு முன்வைக்கும் பரிமாற்றம்! ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக!
இன்று, நீ இருக்கிற வண்ணமாகவே ஆண்டவரின் அருகில் வர உன்னை அழைக்கிறேன், உன் கவலைகளுடன் அவரை உண்மையாக நம்பு, கவலைக்குப் பதிலாக அவரது மகிழ்ச்சியையும் ஞானத்தையும் அவரிடம் கேள்.
நாம் சேர்ந்து ஜெபிப்போம் “ஆண்டவரே, எனக்குள் கவலைகள் பெருகுவதை நான் விரும்பவில்லை. நான் எல்லாவற்றையும் உம் மீது வைக்கிறேன். நான் அனைத்தையும் உம் பாதத்தில் வைக்கிறேன். நான் எல்லாவற்றையும் உமது கரத்தில் வைத்துவிடுகிறேன். உம்மிடமிருந்து இப்போது நான் பெறும் சமாதானம் மற்றும் அமைதிக்கு நன்றி. உமது அன்பான சமூகத்தில் என்னையும் ஆதரித்ததற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக், பல தசாப்தங்களாக நான் என் வாழ்க்கையில் ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்காமல் வாழ்ந்து வந்தேன். நான் மும்முரமாக வேலை செய்வதில் என் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். எனக்குள் ஆண்டவர் இல்லை என்று இப்போது தெரிந்துகொண்டதால் கவலையுடன் காணப்பட்டேன். என் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் நான் மீண்டும் திருச்சபைக்குச் செல்ல ஆரம்பித்தேன். நான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தேன். மேலும் உங்கள் தினசரி செய்திகளை நான் வாசிக்க ஆரம்பித்தேன். நான் ஒரு நாள் இரவு என் அறையில் முழங்கால்படியிட்டு, கர்த்தராகிய ஆண்டவரிடம் என் ஞாபகத்துக்கு வந்த அனைத்து பாவங்களையும் அறிக்கை செய்தேன். கண்ணீரோடு மனம் வருந்தினேன். அன்று இரவு நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு குரல் ஒலி என்னோடு அன்பாகச் பேசி, “மைக்கேல், நானே உன் தேவனாகிய கர்த்தர், நான் உன்னில் இருக்கிறேன்” என்று சொன்னது. அந்தச் சொற்றொடரை நான் அதுவரை கேள்விப்பட்டதே இல்லை. சில நாட்களுக்குப் பிறகு அந்த வாக்கியம் வேதாகமத்தில் உள்ளது என்பதைக் கண்டறிந்தேன். என் வாழ்வில் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் கிடைத்ததால் நான் பாக்கியசாலி. எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தராகிய ஆண்டவர் என் வாழ்க்கையில் இருப்பதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். என் கவலை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. மீண்டும் என்னால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடிகிறது.” (மைக்கேல்)