விடாமுயற்சி செய்வது நமது விருப்பத்தேர்வு

முகப்பு ›› அற்புதங்கள் ›› விடாமுயற்சி செய்வது நமது விருப்பத்தேர்வு

இந்த வாரம் முழுவதும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாய் என்று நான் நம்புகிறேன்! இன்றைய நாளானது, “ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி” என்ற தொடரைத் தியானிப்பதின் கடைசி நாளாக இருக்கிறது! இது உனக்கு மிகுந்த பிரயோஜனமாக இருந்தது என்று எண்ணி நான் ஆண்டவரைத் துதிக்கிறேன்… விடாமுயற்சி பற்றிய இந்த உரையுடன் இத்தொடரை இன்று நாம் முடிவுக்குக் கொண்டுவருவோம்.

நாம் ஒரு காரியத்தை ஆயத்தம்பண்ணி, முதல் அடியை எடுத்துவைத்து, அதைச் செய்யத் துவங்கிவிடுகிறோம், ஆனால் அதைத் தொடர்ந்து செய்வதுதான் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. நான் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் ஊழியத்தைத் தொடங்கியபோது, அது எப்படி முடியும் என்று என்னால் கற்பனைசெய்து பார்க்க முடியவில்லை. எல்லா வேலைகளும் எப்பொழுதும் எளிதானதாக இருப்பதில்லை, ஆனால் என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசுவை நான் நம்புகிறேன். உன்னை ஆசீர்வதிக்கவும், உன் வாழ்க்கை மாற்றத்தைக் காணவும், நீ மகிமையின்மேல் மகிமைக்குச் செல்லவும் ஆண்டவர் இந்த விருப்பத்தை எனக்குள் வைத்திருக்கிறார்! அதனால்தான், இதைத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டபோதும், உனக்கு இந்த தினசரி மின்னஞ்சலைத் தொடர்ந்து அனுப்பி வருகிறேன்.

இதோ, தினமும் எனக்கு உதவும் பல திறவுகோல்கள்:

  • கர்த்தர் நம்பிக்கைக்குப் பாத்திரர் என்றும், அவர் எப்போதும் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார் என்றும் நான் உறுதியாக விசுவாசிக்கிறேன். அவரைப் பின்தொடரவும் ஊழியம் செய்யவும் அவர் உன்னை அழைத்தால், அது நீ விழுவதற்கோ அல்லது அழிவுக்கு நேராகச் செல்லவோ அல்லது மரணத்தின் பாதையில் வழிநடத்தப்படுவதற்கோ அல்ல. கிறிஸ்து இயேசுவில் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் நிறைவான வாழ்வு ஆகிய இவைகளே உனக்காக அவர் வைத்திருக்கும் திட்டமாகும்.
  • நான் ஆண்டவருடைய வார்த்தையையும், அதில் உள்ள வல்லமையையும், அதன் திறனையும் உறுதியாக விசுவாசிக்கிறேன். இந்த வேத வசனத்தைக் கவனிக்கவும்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13) என்னால் ஒரு சில விஷயங்களை மட்டுமே செய்ய முடியுமா? ஒருவேளை, என்னால் கொஞ்ச விஷயங்களை மட்டுமே செய்ய முடிந்தால் என்ன செய்வது? என்று யோசிக்கிறாயா? நிச்சயம் இல்லை… உன்னால் இன்னும் அதிகமாகச் செய்யமுடியும்! என்னால் எல்லா விஷயங்களையும் செய்ய முடியும். ஆண்டவரின் உதவியால், விடாமுயற்சியுடன் தொடரவும், அவரது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றவும் என்னால் முடியும்!
  • இறுதியாக, அசைக்க முடியாத நமது நித்திய ஆண்டவரிடம் ஜெபம் செய்வதால் பலன் உண்டு என்று நான் விசுவாசிக்கிறேன். ஆண்டவர் உனக்குக் காட்டும் திசையில் விடாமுயற்சியுடன் முன்னோக்கிச் செல்ல தினசரி ஜெபவேளை உனக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

நீ மேற்கொண்ட காரியங்களில் உனக்கு ஆண்டவருடைய உதவி தேவைப்படுமானால், இந்த ஜெபத்தை இப்போதே நீ ஏறெடுக்கலாம்! “ஆண்டவரே, சில சமயங்களில் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், எல்லாவற்றையும் விட்டுவிட விரும்புகிறேன். ஆயினும், நான் உமக்காக நிற்காமல் ஓட வேண்டும் – அது கடினமாக இருந்தாலும், அது எப்படி மாறும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும் நீர் என்னை வழிநடத்தும் திசையில் நான் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதுதான் உமது சித்தம் என்பது எனக்குத் தெரியும். உமது உதவியுடன், நான் தொடர்ந்து முன்னேறிச் செல்வதைத் தெரிந்துகொள்கிறேன்! உமக்கும் உமது இரக்கத்துக்காகவும் அன்பிற்காகவும் நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது நான் நம்பிக்கையை இழந்திருந்தபோது எனக்கு நம்பிக்கையைத் தந்தது.” (வில்லியம், ஆலப்புழா)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!