நீ ஆண்டவரின் பதில்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஒவ்வொரு நாளும், இந்த மின்னஞ்சல் செய்திகளை வாசிப்போரிடம் இருந்து, தேவன் அவர்களை எவ்வாறு உயர்த்தினார் மற்றும் இரட்சித்தார் என்னும் பல சாட்சிகள் எனக்கு வருகிறது. இந்த சாதாரண அன்றாட மின்னஞ்சலின் மூலம் தேவன் இப்படிப் பிரசித்தமான பல விஷயங்களைச் செய்வது உண்மையிலேயே ஒரு அருட்கொடையும் பாக்கியமும் ஆகும். ஆண்டவருக்கே சகல மகிமையும் உண்டாவதாக!
உண்மை என்னவென்றால், தேவன் மக்களை ஆசீர்வதிக்க மற்ற மனிதர்களையே பயன்படுத்துகிறார். எப்படியிருந்தாலும், நாம் கிறிஸ்துவின் சரீரமாய் இருக்கிறோம்! (பரிசுத்த வேதாகமம், 1 கொரிந்தியர் 12:27) ஆண்டவரின் பிள்ளைகளாகிய நமக்கு, அவருடைய அன்பை வெளிப்படுத்தும் பொறுப்பு, நம் கையில்தான் உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். நம் நண்பருக்கு இந்தச் சிறிய ஊக்குவிக்கும் செய்தியை அனுப்புவதும், அல்லது தேவையில் இருக்கும் நம் அண்டை வீட்டாருக்கு உதவிக்கரம் நீட்டுவதும், நம் கையில்தான் உள்ளது. (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 19:19)
இந்த சாட்சியை ஒரு வாசகர் அனுப்பி இருந்தார்: “ஒரு நாள், உங்களிடமிருந்து வந்த இந்த மின்னஞ்சல் செய்தியானது, ‘ஒருவருடைய வாழ்க்கையில் கிரியை செய்ய ஆண்டவர் உன்னைப் பயன்படுத்தப்போகிறார்’ என்பதாக அறிவித்தது. மெய்யாகவே அடுத்த நாளே, இரண்டு வருடமாக என்னுடன் தொடர்பில் இல்லாத ஒரு தோழியிடம் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுக்குள் ஏதோ ஒரு எண்ணம் என்னை அழைக்கும்படித் தூண்டியது என்றாள். அவள் விவாகரத்தின் விளிம்பில் இருந்தாள், முற்றிலும் விரக்தி அடைந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதையும் கருத்தில் கொண்டிருந்தாள். அந்த நாள், நான் அவளுக்காக ஜெபித்தேன். அவளை ஆறுதல்படுத்தி, அவள் சார்பாக கண்ணீரோடு ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டேன். அன்றிலிருந்து, அவளுடைய திருமண வாழ்வு சிதையாமல் மீட்டெடுக்கப்பட்டது!”
நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் விலைகொடுத்து வாங்கப்பெற்று இரட்சிக்கப்பட்டதால், கிறிஸ்து உனக்குள் ஜீவிக்கிறார். ஆகவே, ஆண்டவர் உன்னை மற்றவருடைய வாழ்க்கையில் ஆசீர்வாதமாக அனுப்பி, அவர்களுக்கு வேண்டிய பதில்களைக் கொடுப்பர்… அவர்களின் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் பதில் கொடுப்பார்: அந்தப் பதில் இயேசுவே!
என்னோடு சேர்ந்து ஜெபிப்பாயா: “ஆண்டவரே, நீர் நேசிப்பதுபோல நானும் மற்றவர்களை நேசிக்க விரும்புகிறேன், பிறரை நீர் ஆசீர்வதிக்க உதவும் ஒரு பாத்திரமாக நான் இருக்க விரும்புகிறேன். ஆண்டவரே, நீர் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், தேற்றவும், கட்டியெழுப்பவும் என்னைப் பயன்படுத்துவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்!”