நான் உனக்கு ஞாபகப்படுத்த வேண்டுமா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
காரியங்களை அடிக்கடி மறந்து போகும் ஒரு நபரா நீ?
இதை ஒப்புக்கொள்வது எனக்குப் பிடிக்காதுதான், ஆனால் நானும் 🫣 இப்படித்தான் மறந்துவிடுவேன். பல ஆண்டுகளுக்கு முன்பே, நான் செய்ய வேண்டிய வேலைகள் அடங்கிய பட்டியல்களை தயார் செய்யக் கற்றுக்கொண்டேன், மேலும் முக்கியமான ஒன்றைச் செய்யும்படி யாராவது என்னிடம் கேட்டால், நான் அதை மறந்துவிடாதபடி வழக்கமாக எழுதி வைப்பேன்.
நாம் செய்ய வேண்டிய பட்டியல்கள் சிறப்பாக உள்ளன, ஆனால் இதிலும் சிறந்தது எது தெரியுமா? ஒரு ஞாபகப்படுத்தும் பட்டியல்தான்! ஆண்டவருடைய மகத்துவம் மற்றும் அவர் உனக்காக செய்த அனைத்து அற்புதமான செயல்கள் அடங்கிய ஒரு பட்டியல் அவசியம்!
“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என்று சங்கீதம் 103:2 கூறுகிறது.
யோபுவுக்கு ஒரு ஞாபகப்படுத்துதல் பட்டியல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன், ஏனெனில், அவருடைய வலி மற்றும் துன்பங்களுக்கு மத்தியிலும், அவர் ஆண்டவருடைய அனைத்து குணாதிசயங்களையும் பட்டியலிட்டார் (யோபு அத்தியாயம் 9) :
- அவருடைய ஞானம் ஆழமானது
- அவருடைய வல்லமை மகா பெரியது
- அவர் மலைகளை பேர்க்கிறார்
- அவர் ஒருவரே வானங்களை விரித்தவர்
- ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
தனது பிள்ளைகள், சரீர ஆரோக்கியம் மற்றும் செல்வம் என அனைத்தையும் யோபு இழந்துவிட்ட நேரத்தில் ஆண்டவருடைய நற்குணத்தை நினைவுகூருகிறார் என்பதை வாசிப்பது ஆச்சரியமானது. எல்லாம் சரியாக இருக்கிறது என்றோ அல்லது அவர் அதைப் புரிந்துகொள்கிறார் என்றோ நடிக்க முயற்சிக்கவில்லை, இருப்பினும், அவர் ஆண்டவரைப் பற்றி தனக்குத் தெரிந்ததைப் பற்றிக்கொள்கிறார்.
“விசுவாசம் என்பது, ஆண்டவருடைய வழிகளை நீ அந்த நேரத்தில் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவருடைய சுபாவத்தின் மீது முழுமனதோடு நம்பிக்கை வைப்பதாகும்.” – ஓஸ்வால்ட் சேம்பர்ஸ்
இறுதியில், ஆண்டவர் யோபுவின் எதிர்காலத்தை மீட்டெடுத்தார் மற்றும் ‘கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்’ (யோபு 42:12). இந்த நேரத்தில் நீ எதிர்கொள்ளும் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் சரி, வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் பரவாயில்லை, ஆண்டவருடைய அன்பை நினைவில்கொள்வதும், நீ எதிர்பார்த்திருக்கும் முடிவை உனக்குக் கொடுக்கும்படிக்கு அவர் உன்பேரில் நினைத்திருக்கிற நினைவுகள், தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என்பதை விசுவாசிப்பதும் மிகவும் முக்கியமானது. (எரேமியா 29:11)
ஆண்டவரைப் பற்றி ஞாபகப்படுத்தும் நினைவூட்டல் பட்டியலை நீ கடைசியாக எப்போது தயார் செய்தாய்? இன்று சிறிது நேரம் ஒதுக்கி, ஆண்டவர் உனக்காக செய்த அல்லது அவர் செய்த அனைத்தையும் பட்டியலிட்டு எழுதி ஆண்டவரை மகிமைப்படுத்துவாயாக.