தோற்றுப்போய்விடாதே!
முகப்பு ›› அற்புதங்கள் ››
இணையத்தில் அவ்வப்போது நான் பார்க்கும் ஒரு படம் உள்ளது, அதை நான் பலமுறை பார்க்க விரும்புகிறேன். ஒரு பூனை கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்கிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் கண்ணாடியின் பிரதிபலிப்பில், பூனைக்குட்டியானது சிங்கம் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறதைப் போன்று அதில் பார்க்கலாம்!
இந்தப் படம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது! “நான் பயப்படும் குட்டிப் பூனை அல்ல… நான் ஒரு சிங்கம்” என்று நினைக்கவைக்கிறது! இது எனது சவால்களை எதிர்கொள்ளும்போது, ”நான் தோற்கடிக்கப்பட மாட்டேன்! ஆம், இந்த சோதனை தீவிரமானதாக இருந்தாலும், நான் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ள உதவுகிறது.
இதுவே இன்று உனக்கான எனது ஊக்கம். தோற்றுப்போய்விடாதே!
- ஒருவேளை, உன்னை நசுக்க விரும்பும் துக்கத்தின் நேரத்தை நீ இப்போது கடந்து செல்லலாம்.
- ஒருவேளை நீ குடும்ப பிளவு அல்லது தீவிரமான குடும்ப சண்டைகளுக்குப் பிறகு உன் சொந்தக் காலில் நிற்க திரும்பப் போராடிக்கொண்டிருக்கலாம்.
- ஒருவேளை நீ போதைப் பழக்கத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டு, அதிலிருந்து மீள உனக்கு வழி தெரியாமலிருக்கலாம்.
நீ என்ன எதிர்கொள்கிறாய் என்பது எனக்குத் தெரியாது என்றாலும், நான் உனக்குச் சொல்கிறேன்: தோற்றுப்போய்விடாதே! நீ பாதுகாப்பின்றியும் உதவியின்றியும் கைவிடப்படவில்லை என்பதை நினைவில்கொள்.
“வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங்கீதம் 121:2) என்று சங்கீதக்காரன் தாவீது சொல்வதுபோல், உன் பூமிக்குரிய கஷ்டங்களுக்கு மத்தியில், உன் உதவி பரலோகத்திலிருந்து வருகிறது. கர்த்தரிடமிருந்து உனக்கு உதவி வருகிறது! யாரோ ஒருவரிடமிருந்து அல்ல, உன் பரலோகத் தந்தையிடமிருந்து உதவி வருகிறது.
உன் வாழ்க்கை மிகவும் விலையேறப்பெற்றது, உன் எதிர்காலம் மிகவும் மகத்துவமானது. நீ தோல்வியடைய ஒருபோதும் இடமளிக்காதே, (எரேமியா 29:11)
நீ தலை நிமிர்ந்து பார். உன் இரட்சகர் உனக்கு அருகில் இருக்கிறார். (மத்தேயு 28:20) இயேசு உன்னை மீட்க வருகிறார்!
தோற்று விடாதே!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “சரியான நேரத்தில் இந்த வார்த்தை எனக்கு வந்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது! நேற்று நான் வேலை முடிந்து, தோற்கடிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நபராய் வீட்டிற்கு வந்தேன். பிறகு நடுராத்திரியில் கண்விழித்த நான் எல்லாவற்றையும் கைவிட்டுவிடலாம் என்று நினைத்தேன். நான் குளிரில் வெளியே வந்து அமர்ந்திருந்தபோது, எனக்குக் கேட்ட சத்தம் யாருடையது என்று சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன். எனவே, நான் மீண்டும் படுக்கைக்குத் திரும்பினேன். என்னைப் பாதுகாத்து, என் போராட்டங்களில் போராட வேண்டும் என்றும், எனக்கு நல்ல நித்திரையைத் தரவும் வேண்டும் என்று சொல்லி நான் ஆண்டவரிடம் கேட்டேன். பின்பு நான் நிம்மதியாகத் தூங்கினேன். எனக்கு அரவணைப்பையும் ஓய்வையும் கொடுக்கும் அளவுக்கு ஆண்டவர் என்னை நேசிக்கிறார். வேலை கடினமாக இருக்கிறது, ஆனால் நான் என்னால் முடிந்ததைச் செய்யப்போகிறேன்; ஆண்டவரின் உதவியுடன், அவர் என்னை வேறு ஒரு காரியத்தைச் செய்ய அழைக்கும்வரை, நான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வேன் அல்லது நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பும் பாடத்தை நான் கற்றுக்கொள்வேன். ஒருவேளை ஆண்டவர் என்னை உயர்த்த நினைக்கிறார். நான் நேசிக்கப்படுகிறேன், நான் முக்கியமான நபர் மற்றும் மதிப்புமிக்க நபர் என்பதை உறுதிப்படுத்தும் உங்கள் செய்திக்கு நான் நன்றி சொல்கிறேன்.” (பிரகாஷ்)