தேவனுடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கானவை!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“உன் வாழ்வின் மீது, தேவன் அறிக்கையிட்ட வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறும்!”
நாம் எப்படி விஷயங்களை “எளிதில்” சொல்லிவிடுகிறோம் என்பதை நீ எப்போதாவது கவனித்திருக்கிறாயா?
“ஆம், நான் சத்தியமாக… இந்த வாரம் அதைச் செய்துவிடுவேன்,” என்று யாரோ ஒருவர் உன்னிடம் கூறியிருக்கலாம்.
பின்னர், அடுத்த வாரம் தொடங்குகிறது, ஆனால் அவர்கள் சொன்னதுபோல் எதுவும் நடக்கவில்லை.
இப்படி உனக்கு எப்போதாவது நடந்திருக்கிறதா? சில சமயங்களில், இப்படி வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாத இடத்தில் இருப்பவர்கள், நாமாகவும் இருக்கக்கூடும்.
நிச்சயமாகவே தேவன், மனிதர்களாகிய நம்மிலிருந்து வேறுபட்டவராய் இருக்கிறார்! அவர் தமது வார்த்தையில், “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” என்று அறிவிக்கிறார். (ஏசாயா 55:11)
ஆண்டவர் உனக்கு என்ன சொல்லியிருந்தாலும் சரி, அவருடைய வார்த்தை நிறைவேறும் என்று நீ உறுதியாக நம்பலாம்! அவருடைய வார்த்தை பறந்துபோய் காற்றில் மறைந்துவிடாது. அது எதற்காக அனுப்பப்பட்டதோ, அதை நிறைவேற்றி முடித்து, அவருடைய சித்தத்தை முழுமையாகச் செய்தபின் ஆண்டவரிடத்திற்குத் திரும்பிச் செல்கிறது.
அதனால்தான், சில சமயங்களில் நீ சந்தேகப்பட்டாலும் கூட, அந்த வார்த்தை “வாய்க்கும்” மற்றும் ஆண்டவர் விரும்புவதை “நிறைவேற்றும்” என்று வேதாகமம் உனக்கு வாக்களிக்கிறது!
ஆண்டவர் உனக்காக பல வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். அவையாவன: இரட்சிப்பின் வாக்குத்தத்தங்கள் (ரோமர் 10:9), சமாதானத்துக்கான வாக்குத்தத்தங்கள் (யோவான் 14:27), குணப்படுத்துதலுக்கான வாக்குத்தத்தங்கள் (யாத்திராகமம் 15:26).
இந்த வாக்குத்தத்தங்களில் எதுவும் வெறுமனே வார்த்தைகளாக சொல்லப்படவில்லை – இவை அனைத்தும் உன் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுகின்றன.
தேவன் வெறுமனே வார்த்தைகளைப் பேசுவதில்லை. அவர் சொல்வது அனைத்தும் நிச்சயமாக உன் வாழ்வில் நிறைவேறும்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “வணக்கம் பாஸ்டர் எரிக், தேவனுடைய வார்த்தையாகிய வாக்குத்தத்தங்கள் நிறைந்த இந்த மின்னஞ்சல்களை சரியான நேரத்தில் எனக்கு அனுப்பிவைப்பதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இந்த மின்னஞ்சலை ஒரு வாரத்திற்கு முன்பு வாசித்தேன், பின்னர் திரும்பிச் சென்று அதே செய்தியை இப்போது மீண்டும் வாசித்தேன். இந்நாட்களில் நான் கடந்து செல்லும் காரியத்தை எதிர்கொள்ள என்னை ஆயத்தப்படுத்தவே இந்த வார்த்தை எனக்குத் தேவையான நேரத்தில் சரியாக வந்திருந்தது! இன்று எனது கடைசி நாள் என்று பணியிடத்தில் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வாக்குத்தத்தங்களையும் சத்தியத்தையும் என்னுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி. இந்த மின்னஞ்சலின் மூலம் தேவனுடைய செய்திகளைப் பெறுவது இன்று சற்று சுலபமாக இருக்கிறது. கர்த்தர் இந்த மின்னஞ்சல்களை நமக்கு ஊழியம் செய்யவும், வரவிருக்கும் காரியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் பயன்படுத்துகிறார். என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன். இப்போது தைரியத்துடனும், நம்பிக்கையுடனும், சமாதானத்துடனும் எனது தொழிலைக் குறித்து ஆண்டவரிடத்தில் என்னால் ஜெபிக்க முடியும். கர்த்தர் எனது வாழ்வில் ஒரு புதிய கதவைத் திறக்கிறார் என்பதை அறிந்துகொள்ள இது உதவுகிறது. உங்களது ஊக்கத்திற்கு மிகவும் நன்றி. இயேசுவே உமக்கு நன்றி!” (டார்லீன்)