தேவனாலே எல்லாம் கூடும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனாலே எல்லாம் கூடும்

அடுத்த ஏழு நாட்களுக்கு, எனக்குப் பிடித்த வாக்குத்தத்தங்களை உன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்த வாக்குத்தத்தங்கள் என் வாழ்வின் இருண்ட தருணங்களில் என்னைத் தூக்கி நிலைநிறுத்தின, மேலும் என் வாழ்வின் மிக உயர்ந்த மலையுச்சி போன்ற அனுபவங்களுக்கு என்னை அழைத்துச் சென்றன. இந்த வாக்குத்தத்தங்கள் என்னுடையது என உரிமை கோருவதும், ஆண்டவர் மீது எனக்குள்ள விசுவாசத்தை பலப்படுத்தும் வல்லமை வாய்ந்த ஆயுதமாக அவற்றைப் பயன்படுத்துவதும் எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை நாம் அவருக்கு நினைவூட்ட வேண்டியதில்லை அல்லது அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவாரா இல்லையா என்று கேள்வி எழுப்ப வேண்டியதில்லை என்பதை நாம் உணரும்போது எவ்வளவு சந்தோஷம்!

பேதுருவின் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்:

“தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.” (2 பேதுரு 1:3-4)

என்ன அதிசயம் இது! தெய்வீக வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் நம்மிடம் உள்ளன! இயேசுவைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக அறிந்துகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக ‘தேவனால் எல்லாம் கூடும்’ என்பதை தெரிந்துகொள்வோம். ஆண்டவருடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள், உலகத்தின் சீர்கேட்டிலிருந்து விடுபட்ட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை நீயும் நானும் வாழ முடியும் என்ற உண்மையை நமக்குக் காட்டுகின்றன. என்ன ஒரு அற்புதமான வாக்குத்தத்தம்!

ஆண்டவர் தம் வாக்குத்தத்தங்களை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றுவார்! தேவன் நல்லவர், அவர் ஒரு நல்ல தகப்பனாக ஒருபோதும் வாக்குத்தத்தத்தை மீறமாட்டார். இன்று, குறிப்பாக உனக்காக ஆண்டவர் அளித்த இந்த விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்தின் மீது நாம் கவனம் செலுத்துவோம்:

“இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.” (மாற்கு 10:27)

தேவனாலே எல்லாம் கூடும். ஒரு சில விஷயங்கள் மட்டுமே அல்ல. தேவனால் எல்லாமே கூடும்! இன்று நீ ஒரு சாத்தியமற்ற சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். ஆனால், ஒரு அதிசயத்திற்கான முதல் முன்நிபந்தனை சாத்தியமற்ற சூழ்நிலைதான். தேவனால் எல்லாம் கூடும் என்ற ஆண்டவருடைய வாக்குத்தத்தம் உனக்கு உண்டு.

இன்று ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை நினைத்து உற்சாகமாய் இரு, நீ ஒரு அதிசயம் என்பதை ஒருபோதும் மறக்காதே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!