சமாதானம் எங்கிருந்து வருகிறது?
முகப்பு ›› அற்புதங்கள் ››
சில நாட்களுக்கு முன்பு ஜோஸ்லின் என்பவர் எனக்கு இவ்வாறு எழுதியிருந்தார்: “நான் வாழ்வின் புயலுக்கு மத்தியில் இருந்தேன், குடும்பப் பிரச்சனைகளால் முற்றிலும் பீதியடைந்தேன். நான் ஆண்டவரிடத்தில் ஜெபம் செய்தேன், என் முழு பலத்துடன் அவரைப் பற்றிக்கொண்டேன், ஆனாலும் அந்நேரம்வரை சமாதானத்தைக் காண முடியவில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிறகு, ஒரு நாள் காலையில், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலில் வாசித்த ஒரு செய்தி என் இதயத்தைத் தொட்டது: நான் தனியாக இல்லை. ஆண்டவர் என்னைப் பார்த்தார். எனக்கு நடப்பதெல்லாம் அவருக்குத் தெரியும்; அவர் அங்கிருந்தார். நான் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அவர் செயல்படும்வண்ணம் என் பாரத்தை அவரது பாதபடியில் வைக்க வேண்டும் என்றும் புரிந்துகொண்டேன். பின்னர், நான் முன்பு அறிந்த சமாதானம் எனக்குள் முழுவதுமாகத் திரும்பியதை உணர்ந்தேன். எல்லாம் சரியாகிவிடும் என்பதை அது எனக்கு உணர்த்தியது.”
வேதாகமம் சொல்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6-7)
இதுவரை, உன் கவலையும் உன் கஷ்டமும் உனக்கு என்னத்தை உருவாக்கித் தந்தது? உன் சமாதானத்தைத் திருடியதைத் தவிர, அது வேறென்ன பலன்களைக் கொடுத்திருக்கிறது?
- கவலை உனக்கும் உன் அன்புக்குரியவர்களுக்கும் இடையே சுவர்களைக் கட்டியெழுப்பி, உன் நம்பிக்கையைப் பறித்துவிட்டதா?
- நீ வருந்துகின்ற சூழ்நிலைக்கு உன்னைக் கீழே தள்ளி, கவலை உன் முடிவுகளை பாதித்துள்ளதா?
- இது உன் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதா?
- இது எப்போதாவது நல்ல பலன்களை உனக்கு அளித்திருக்கிறதா?
இதோ உனக்கான ஒரு நற்செய்தி: ஆண்டவர்தான் உன் சமாதானக்காரணர்! (எபேசியர் 2:14)
சமாதானம் என்பது ஆண்டவர் உனக்குக் கொடுப்பது மட்டுமல்ல, அவரே உனக்கு சமாதானக்காரணராய் இருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். இயேசு நம்மிடம் சொல்லியிருக்கிறார்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” (யோவான் 14:27)
இன்று, இதை விசுவாசித்துப் பற்றிக்கொள்: சமாதானத்தின் தேவனிடமிருந்தே ஆண்டவருடைய சமாதானம் வருகிறது. அவரே சமாதான பிரபு.
ஜோஸ்லினைப்போல, இன்றே அவரது சமாதானத்தைப் பெற்றுக்கொள்வாயாக!