என் தவறுகள் பற்றி நான் உன்னுடன் பேச விரும்புகிறேன்…
முகப்பு ›› அற்புதங்கள் ››
“அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற பக்கத்தில் நீங்கள் உள்ளே வந்தவுடனே, உங்களிடம் வெளிப்படையாகவும் திறந்த மனதுடைய நபராகவும் இருப்பேன் என்று உறுதியளித்தேன்.
ஒரு இளம் போதகராக, வெளிப்புறத் தோற்றங்களில் அதிக கவனம் செலுத்துவது, உள்ளாக இருப்பதைப் புறக்கணிப்பது என்ற தவறை நான் அடிக்கடி செய்தேன் – இதுவே என் இருதயத்தின் நிலையாக இருந்தது. பொதுவாக, என்னால் ஜெபிக்க முடியவில்லை. நான் வேதாகமத்தை வாசித்தேன் என்றால், நான் ஒரு பிரசங்கத்திற்கு ஆயத்தப்படுவதற்காக மட்டுமே வாசித்தேன்.
கடுமையான மன அழுத்தத்தையும், உள்ளத்தில் பெருகின வெறுமையை நான் உணர்ந்ததையும் ஈடுகட்ட, என் எண்ணங்களை எதிர் பாலினத்தின் பக்கம் திருப்பினேன். ஆண்டவர் என்னை ஒரு பெரிய ஒழுக்கநெறி வீழ்ச்சியிலிருந்து இரட்சித்தார், அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இரட்சித்தார், நான் என் மனதின் வழியாய் விபச்சாரம் செய்தேன். நான் ஒரு நீண்ட நாள் போதகப் பயிற்சியை முடித்திருந்தாலும், தெளிந்த புத்தியோடு ஒருவரிடம் எப்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி யாரும் எனக்கு புரியவைத்ததில்லை. நான் மனம்திறந்து வெளிப்படையாக பேசுவதற்கான நம்பிக்கைக்குரியவர்கள் யாரும் எனக்கு இல்லை.
மனதில் உள்ள உண்மையான பிரச்சனைகளைத் தீர்க்காமல் புறத்தோற்றத்தின்மீது மட்டும் கவனம் செலுத்தும் இந்த ஆபத்தான வலையில் விழும் அபாயம் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இனி ஒருபோதும் நான் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் புறத்தோற்றத்தை மட்டுமே கொண்டிருக்க மாட்டேன்.
உண்மையாகவும், வெளிப்படையாகவும் மற்றும் பலவீனமாகவும் இருப்பதில் தவறே இல்லை. நானோ முற்றிலும் எதிராகவே இருந்தேன்!
விபச்சாரம் செய்து கொலை செய்து கொடூரமாக வீழ்ந்த தாவீது ராஜா, “ஆண்டவரின் இருதயத்திற்கு ஏற்ற மனிதன்” என்று அழைக்கப்படுகிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவரைப் போலவே, நீயும் ஜெபிக்கலாம், “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” (வேதாகமம், சங்கீதம் 51:10)
தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் ஒரு பரிபூரணமான மனிதனா? இல்லை. அவன் ஒரு நேர்மையான மனிதன்! நீ பலவீனமாக இருக்க உன்னை அனுமதித்தால் என்ன நடக்கும்? ஆண்டவரின் கிருபை உன்மீது செயல்பட இன்னும் நிறைய வாய்ப்பு கிடைக்கும்!
சற்று யோசித்துப் பார்… கடைசியாக எப்போது ஒருவரிடம் உன் பாவங்களை அறிக்கை செய்தாய்? ஆண்டவரின் வார்த்தையின்படி, இது தெய்வீக குணப்படுத்துதலுக்கான ஒரு திறந்த கதவு! (யாக்கோபு 5:14-16 ஐப் பார்க்கவும்) இன்று இப்படி உனக்கு காது கொடுத்து கேட்கும் நபரிடம் நீ திரும்ப முடியுமா?