“உன்” தரிசனம் நிறைவேறாமல் இருக்கையில்…
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீ எப்போதாவது மிகவும் விரக்தி அடைந்திருக்கிறாயா?
“விரக்தியடைதல்” : ஒரு கட்டத்தில், என் வாழ்க்கையில் நான் நினைத்தபடி விஷயங்கள் நடக்காதபோது, நான் அப்படித்தான் உணர்ந்தேன். காலப்போக்கில், என் பின்னடைவுகளிலும் கடைசி நிமிட மாற்றங்களிலும் ஆண்டவருடைய கரம் இருந்ததைப் புரிந்துகொள்ளத் துவங்கினேன். நான் விரக்தியிலிருந்து வெளியேவந்து விழிப்புணர்வடைந்தேன். எப்படி அது நடந்தது? இதோ ஒரு உதாரணம்.
சில நாட்களுக்கு முன்பு, நான் ஒரு மிக முக்கியமான மாநாட்டில் வேத வார்த்தையைப் பிரசங்கிக்க சென்றேன். நான் இந்த பயணத்திற்கு தேவையான அனைத்தையும் ஒழுங்குசெய்தேன், எனது தங்கும் அறையை முன்பதிவு செய்தேன், விமானத்தை சென்றடைந்தேன், விமான களைப்பு நேரத்தை சமாளித்தேன், நான் பேசுவதற்குத் தயாராகும்படி நேரத்தை ஒதுக்கினேன். ஆனால், நான் அங்கு சென்றடைந்தபோது, கடைசி வினாடியில் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை நினைத்து கவலை படுவதற்கு பதிலாக, இந்த தருணத்தில் எனக்கு முன்னே இருந்த மற்ற வாய்ப்புகளை நோக்கி கவனம் செலுத்த முடிவு செய்தேன். இந்தப் “பின்னடைவு” ஒரு புதுமையான மனிதரும், ஆண்டவரால் விசேஷமாகப் பயன்படுத்தப்படுபவருமான பாபி க்ரூன்வால்ட் என்ற மனிதரை சந்திப்பதை சாத்தியமாக்கியது. உலகின் முதலாவது சிறந்த வேதாகம செயலியான YouVersion ஐ https://www.bible.com/app உருவாக்கியவர்தான் பாபி அவர்கள். மேலும் அந்த நாளில் கர்த்தர் ஒரு விசேஷித்த திட்டத்தை வைத்திருந்தார் என்றும் அதன் மூலமாக ஏதோவொரு நன்மை பிறக்கும் என்றும் நான் நம்பினேன்.
சில சமயங்களில் நாம் சிவப்பு விளக்கினால் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆண்டவர் நமக்கு வழியை செவ்வைப்படுத்தும்வரை காத்திருக்கிறோம். அதே நேரத்தில், அவர் மற்ற பாதையில் போக்குவரத்தை சீர் செய்கிறார்; பின்னர் நாம் செல்லும்படி பச்சை நிற விளக்கை எரியச்செய்கிறார். இது ஒரு வித்தியாசமான பாதையும், நமக்கான மற்றொரு வாய்ப்புமாக இருக்கிறது, ஆனால் நமது கண்களோ, நமக்கு முன்னால் உள்ள விசேஷித்த வாய்ப்பைக் கவனிக்காமல், நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த திட்டத்திலேயே மிகவும் உறுதியாகப் பதிக்கப்பட்டுள்ளன.
வேதாகமம் நன்றாகச் சொல்லுகிறது: “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 55:8) நாம் நினைப்பதுபோல் ஆண்டவர் நினைப்பதில்லை. அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார்!
உன் கனவு, நீ நினைத்த வழியில்தான் நிறைவேறும் என்று நீ உறுதியாக ஒரு திட்டத்தை கொண்டிருப்பதால், உன் கையில் கிடைத்த வாய்ப்புகளை நீ இழக்கலாம்! நீ எதிர்பார்த்தது சரியாக நடக்காவிட்டாலும், “பச்சை விளக்குகள்” – அதாவது, உனக்கு ஆதரவாகத் திறந்திருக்கும் கதவுகளை நீ பயன்படுத்திக்கொள்ளும்படி உன்னை அழைக்கிறேன். அது உன் திறமைகளை வளர்த்துக்கொள்ளக்கூடிய எதிர்பாராத தொழில் வாய்ப்பாகவோ அல்லது பல ஆண்டுகளாக நீ பார்த்திராத உன் நண்பனுடனான சந்திப்பாகவோ இருக்கலாம், உனக்கான பச்சை விளக்குகளுக்கு கவனம் செலுத்து!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களது செய்திகள் எனக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன, மேலும் ஆண்டவர் நம் வாழ்வின் மீது ராஜரீகமுள்ளவர் என்பதையும் அர்ப்பணித்தல் முற்றிலும் அவசியம் என்பதையும் ஒவ்வொரு நாளும் அவை எனக்கு நினைவூட்டுகின்றன.” (ரிச்சர்ட், கொல்லம்)