உறுதியாய் இரு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உறுதியாய் இரு!

தேவன் பலமுள்ளவர் என்பதையும், அவர் வல்லமை வாய்ந்தவர் என்பதையும், அவர் உன்னை உற்சாகப்படுத்துகிறார் என்பதையும், மேலும் உன்னைச் சுமந்து நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாய் இருக்கிறது என்பதையும் நாம் ஒன்றாக இணைந்து தியானிக்கப் போகிறோம்! நீ ஆயத்தமாக இருக்கிறாயா?

பழைய ஏற்பாட்டில், தேவனுடைய ஜனங்களைப் பற்றியதும், எகிப்தை விட்டு வெளியேறியதிலிருந்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் பிரவேசிக்கும் வரையிலான அவர்களது பிரயாணத்தின் சம்பவத்தை நாம் வாசிக்கலாம். இவை எல்லாமே நிச்சயமாக, யுத்தங்கள் இல்லாமல் நிறைவேறவில்லை, ஆனால் தேவன் அவர்களோடு கூட இருந்தார்.

குறிப்பாக இன்று, நான் உன்னுடன் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றிப் பேச விரும்புகிறேன். ஒரு நாள் சத்துருக்கள் இஸ்ரவேலரைத் தாக்க வந்தபோது, ​​மோசே ஆண்டவரிடமிருந்து ஒரு சிறப்பு யுக்தியைப் பெற்றுக்கொண்டார்… அவர் ஜெபிக்கும்படிக்கு ஒரு மலையின் மீது ஏற வேண்டும், மற்றும் யோசுவா பள்ளத்தாக்கில் யுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் அது.

இதை நாம் வேதாகமத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்: “மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்”. (யாத்திராகமம் 17:11 இல் வாசிக்கவும்)

மோசே தனியாக இருக்கவில்லை. ஆரோனும் ஊரும் அவன் கைகளை உயர்த்திப் பிடித்திருந்தார்கள். இதைத்தான் நாம் வேதத்தில் வாசிக்கிறோம்: “மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது”. (யாத்திராகமம் 17:12)

சில சமயங்களில் நமக்கு உதவி செய்வதற்கும் நம்மைத் தாங்குவதற்கும் யாராவது ஒருவர் தேவைப்படுகிறார்கள். அதாவது, ஒரு வார்த்தையின் மூலமாக, ஒரு புன்னகையின் மூலமாக, ஒரு சிறிய அளவில் நம்மை உற்சாகப்படுத்துவதின் மூலமாக, நம்மைத் தாங்கிப் பிடிக்கும் ஒருவர்தான் நமக்குத் தேவை. “அனுதினமும் ஒரு அற்புதம்” என்ற இந்த எழுத்துக்கள் மூலமாக இதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன்.

உன்னுடைய கைகளை உயர்த்திப் பிடிக்க உனக்கு உதவி செய்து, இன்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்… உன் கைகளை நெகிழ விடாதே! தேவன் தமது முடிவை இன்னும் சொல்லவில்லை. ஜெயம் உனக்கே. வாக்குப்பண்ணப்பட்ட தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது. உன்னால் நிச்சயமாகக் கூடும்! பலங்கொண்டு இரு! தோல்வி எதிரிக்கானது, உனக்கானது அல்ல. உன்னை நேசிப்பவரால் நீ ஜெயங்கொள்பவராய் இருக்கிறாய்!

மறந்துவிடாதே… உன் யோசுவாவாகிய, கர்த்தராகிய இயேசு, ஏற்கனவே ஜெயத்தைக் கொண்டுவந்துவிட்டார்! அவர் ஜெயக்கிறிஸ்துவாய் இருக்கிறார், நீ ஜெயங்கொள்பவராய் இருக்கிறாய்!

நாம் ஜெபத்துடன் இன்றைய தியானத்தை முடிப்போம்…“கர்த்தாவே, என்னை உற்சாகப்படுத்தி என் ஆத்துமாவைப் பலப்படுத்தும் உமது வார்த்தைகளுக்கு நன்றி. நான் பலங்கொண்டு இருக்கவும், போராடவும், மீண்டும் மீண்டும் உம்மை விசுவாசிக்கவும் விரும்புகிறேன். நீர் எனக்குக் கொடுத்துவிட்டதாலும், நீர் எனக்காக ஜெயங்கொண்டதாலும், ஜெயம் எனக்குத்தான் சொந்தம் என்று விசுவாசத்துடன் அறிக்கையிடுகிறேன். உம்முடைய எல்லா வரங்களுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி! இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!