உன் கஷ்டம்கூட உனக்கு ஆசீர்வாதமாக மாறக் கூடும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் கஷ்டம்கூட உனக்கு ஆசீர்வாதமாக மாறக் கூடும்

ஜேடன் என்ற ஒரு சிறு பையன் இருந்தான், அவனது வாழ்க்கை மிகவும் வருத்தம் நிறைந்ததாக இருந்தது. அவனுக்கு 4 வயதாக இருந்தபோது அவனது தந்தை மரித்துவிட்டார். இந்த சோக சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தாய் தூக்கத்தில் மரித்துக்கிடந்ததைப் பார்க்க நேரிட்டது. ஜேடனைப் பார்த்தவர்கள் அனைவரும் அவன் மீது பரிதாபப்பட்டு, மிகுந்த சோகத்துடன் அவனைப் பார்த்தனர்.

துக்க முகத்துடன் தன்னை நோக்கிப் பார்க்கிற அநேகரைக் கண்டு அலுத்துப்போன ஜேடன், இவர்களை மீண்டும் மகிழ்ச்சியடையச் செய்வதற்கான வழியை யோசிக்க ஆரம்பித்தான். தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து அவன் புன்னகை செய்தால் அவர்களும் அப்படியே புன்னகை செய்வார்கள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். ஜேடன் தனது அத்தையுடன் வசித்து வந்தான். ஜேடனும் அவனது அத்தையும், தெருவில் சோகமாகக் காணப்பட்டவர்களை அணுகத் தொடங்கினர். இந்தச் சிறுவன் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தான், சில சமயங்களில் அவர்களுக்கு ஒரு சிறிய பொம்மையையும் கொடுத்தான்.

இதை அறிந்த ஊடகங்கள் இந்தக் கதையைப் பகிரத்தொடங்கின; எனவே, மக்கள் தாங்கள் புன்னகை செய்யும் புகைப்படங்களையும் ஜேடனுக்குப் பரிசுகளையும் அனுப்பத் தொடங்கினர். ஜேடனின் செயல்களைப் பாராட்டி தேசிய அளவிலான ஒரு இயக்கம் கூட உருவானது!

ஒருவேளை, தனது வாழ்வில் இவ்வளவு அதிகமாக இழந்த ஒரு சிறுவனால், எப்படி இவ்வளவு அதிகமாகக் கொடுக்க முடியும் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாம்.

வேதனை உண்டாக்கும் சூழ்நிலைகள் ஏற்படும்போது, ​​நம்மில் பலர் சோகத்திலும் தனிமையிலும் முற்றிலும் மூழ்கிவிடக் கூடும். ஆனாலும், ஜேடனுக்குக் காண்பித்ததைப்போலவே, ஆண்டவரால் நமக்கு வேறு வழியைக் காட்ட முடியும் என்று நான் நம்புகிறேன். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி, இயேசுவின் கிருபையினால் உன் தலையை நிமிரச் செய்து, உன் வேதனையை மகிழ்ச்சியாக மாற்றி இந்தச் சோதனையை‌ மேற்கொள்ள ஆண்டவரால் உனக்கு உதவ முடியும்.

“… நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.” (எரேமியா 31:13)

நீ என்னுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறாயா?… “ஆண்டவரே, நான் இருக்கும் இந்தச் சூழ்நிலையையும், நான் இழந்ததையும், என்னிடமிருந்து பறிக்கப்பட்டதையும் நீர் பார்க்கிறீர். இது தாங்கிக்கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது, ஆனால் நீர் எனக்கு ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறீர் என்று நான் நம்புகிறேன். ஆண்டவரே, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் என் வேதனையை எப்படி மகிழ்ச்சியாக மாற்றுவது என்பதையும் எனக்குக் காட்டுவீராக. நான் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நபராகவும் அவர்களுக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாகவும் மாற உதவுவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது எனக்கு உத்வேகம் அளித்து, என் மனச்சோர்வை மாற்றவும் மகிழ்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. இச்செய்திகள் எவ்வளவு அன்பாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கின்றன என்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.” (ஸ்டீபன்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!