உன் ஆத்துமாவிற்காக நீ என்ன செய்கிறாய்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீண்டதொரு இரவு தூக்கத்திற்குப் பிறகு, காலையில் நாம் எழும்போது, நம் கைகள் மற்றும் கால்களை நீட்டி சோம்பல் முறிக்கிறோம். சிலருக்கு முழுமையாக தூக்கத்திலிருந்து எழுந்திருந்து புத்துணர்வு பெற சூடான காபி அருந்த வேண்டியிருக்கும் அல்லது குளிக்க வேண்டியிருக்கும்.
இன்னும் சிலர், காலையில் எழுந்தவுடன் உற்சாகமாய் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் பேஸ்புக்கைப் பார்த்து, தங்கள் மூளைக்குள் ஏராளமான தகவல்களை நிரப்பத் தொடங்குகிறார்கள்; அவற்றில் சில நல்ல செய்திகளும் உண்டு, சில எதிர்மறையான செய்திகளும் உண்டு. கவலைகள் மனதை நிரப்பத் தொடங்குகின்றன. நான் தனிப்பட்ட முறையில் இந்தத் தவறை அடிக்கடி செய்துள்ளேன், இந்தத் தவறை நீ தவிர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆண்டவர் உன்னை ஜீவனுள்ள ஆத்துமாவாக உருவாக்கினார். தம்முடைய ஜீவ சுவாசத்தை உனக்குள் வைத்தார். மேலும் இந்த சுவாசமும், இந்த தெய்வீக வாழ்க்கையும் அனுதினமும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
பரிசுத்த ஆவியானவரின் இதமான தென்றல் காற்று உன் வாழ்வில் ஊதப்படும்போது, உன் ஆத்துமாவில் உண்டாகும் விழிப்பு ஒவ்வொரு நாளும் உனக்கான ஒரு அதிசயம்.
“…காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.” (வேதாகமத்தில் ஏசாயா 50:4ஐப் பார்க்கவும்)
1 இராஜாக்கள் புத்தகத்தில், எலியா தீர்க்கதரிசி ஒரு மலையின் மீது ஏறிச் சென்று மிகவும் ஆர்வத்துடன், தேவனுடைய பிரசன்னம் வெளிப்படுவதற்காகக் காத்திருப்பதை நாம் காண்கிறோம். பலவிதமான சத்தம், பலத்த காற்று, பூகம்பம் மற்றும் அக்கினி போன்றவை தோன்றுகின்றன, ஆனால் ஆண்டவர் இவை எவற்றிலும் இல்லை என்று வேதாகமம் சொல்கிறது (1 இராஜாக்கள் 19:11-13ஐப் பார்க்கவும்). பிறகு, ஒரு மெல்லிய சத்தம் வருகிறது… இந்த சத்தத்தில்தான் ஆண்டவர் இருக்கிறார்!
கர்த்தர் எலியாவுடன் பேசத் தொடங்குகிறார். மேலும் எலியா கர்த்தரோடு பேசுகிறார். அங்குதான் எலியா கர்த்தரிடத்தில் மனம் திறந்து பேசி, தனது வலியைப் பகிர்ந்துகொள்கிறார்; அதோடு கூட, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் தனது எதிர்காலத்திற்கான வழிநடத்துதலையும் அவர் பெற்றுக்கொள்கிறார்.
ஒவ்வொரு நாளும் காலை வேளையில், கர்த்தர் உனக்காகக் காத்திருக்கும் இந்த இடமானது, அமைதி நிறைந்தது. நீ காலையில் எழுந்தவுடன் “சத்தம்” மற்றும் குழப்பம் நிறைந்த இடத்திற்குள் நுழைந்துவிடாதே.
அமைதியாக இருந்து, கற்றுக்கொள்ளும்படி செவிகொடுப்பதற்கு, உன் ஆத்துமாவை எழுப்பும்படி ஆண்டவரிடம் கேள். இயேசு கிறிஸ்துவின் மீது உன் சிந்தையை வை. பரிசுத்த ஆவியானவர் உன்னைச் சந்தித்து, உன் ஆத்துமாவுடன் பேசி, பயிற்சி பெற்ற ஒரு சீஷனைப்போல நீ வாழ உனக்கு உதவுவாராக.
இன்று நான் உனக்காக ஜெபிக்கிறேன், நீ மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய் என்று நான் நம்புகிறேன்!