உங்கள் வலைகளை வீசுங்கள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்கள் வலைகளை வீசுங்கள்

என் வாழ்நாள் முழுவதும் நான் பிடிவாதக்காரனாக இருந்தேன் – நான் இதை ஒப்புக் கொள்ள வேண்டும். என் கோபம் என்னை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சிக்கலில் சிக்க வைத்துள்ளது மற்றும் நான் எல்லா சமயங்களிலும் சிறந்த தீர்மானங்களை எடுத்ததில்லை.

நான் இயேசுவைச் சந்திப்பதற்கு முன்பு, என் விசுவாசம் மிகத் தாழ்வான நிலையில் இருந்தது. மேசியாவின் வருகைக்காக நீண்ட காலமாகவும் தீவிரமாகவும் காத்திருந்ததால், ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்து, மேன்மேலும் என் விசுவாசத்திலிருந்து விலகிச் சென்றேன் என்றும் சொல்லலாம்.

நான் சூதாடினேன், பணத்திற்காக சண்டையிட்டேன், ஓய்வு நாளில் மீன்பிடிக்கச் சென்றேன்! முற்றிலும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் நான் இருந்தேன், எனது கடன்கள் அதிகமாக இருந்தன, என்ன செய்வது என்று புரியாத ஒரு நிலையில் இருந்தேன்.

அந்த இரவு எனக்கு நினைவிருக்கிறது: எனக்கு தெரிந்த ஒரே தொழிலாகிய மீன்பிடித்தலை செய்ய புறப்பட்டேன். நல்ல அளவில் மீன்கள் அகப்பட்டால் எனது கடன்களை அடைத்துவிட்டு சிறைக்குச் செல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு கடலில் வலையைப் போட்டேன். ஆனால் அன்று இரவு எனக்கு ஒரு மீனும் அகப்படவில்லை.

என் சகோதரன் அந்திரேயா மற்றும் செபதேயுவின் மகன்களும் என்னுடன் வந்தனர், ஆனால் அவர்கள் உதவிய போதிலும் எங்களால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியவில்லை. என்னால் இதற்க்கு மேல் செல்ல தெம்பு இல்லை. நான் எனது முழு முயற்சியையும், பெலத்தையும் செலவழித்த பின்பு சோர்வடைந்து, அவநம்பிக்கையுடன், விசனமடைந்து காணப்பட்டேன்…

இருப்பினும், நான் கரையை அடைந்ததும் எல்லாம் மாறியது. அங்குதான் நான் அவரை முதன்முதலில் பார்த்தேன். இயேசு கடற்கரையில் கூடியிருந்த மக்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். மேலும், என்னுடைய படகை மேடையாகப் பயன்படுத்திக் கொள்ள கேட்டார். இச்சூழ்நிலையில் நான் செய்ய விரும்பிய கடைசி விஷயம் இதுவே என்று நான் சொல்ல வேண்டும். ஆனால் என் சகோதரன் அந்திரேயா இந்த மனிதரைப் பற்றி என்னிடம் சொல்வதை நிறுத்தவில்லை. மேலும் அவரது கண்களில் ஏதோ சிறப்பான ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அதனால் ஒப்புக்கொண்டேன்.

இயேசு பிரசங்கிக்கத் தொடங்கினார், அவருடைய வார்த்தைகள் பிற ஆசிரியர்களைப் போல இல்லை: அவருடைய வார்த்தைகளுக்கு அதிகாரம் இருந்தது. அவர் போதனை செய்து முடித்ததும், என்னைப் பார்த்து, “வலையை ஆழத்திலே போடு” என்றார். நான் அவரிடம் கொஞ்சம் வாதிட்டேன், முன்னர் நடந்த கதையைச் சொன்னேன்… ஆனால் அவர் அதைச் செய்யச் சொன்னதால், அவர் பேச்சைக் கேட்க தீர்மானித்தேன். அப்போதுதான் சாத்தியமற்ற ஒன்று நடந்தது: சில நொடிகளில், எங்கள் வலைகள் கிழிந்து போகத்தக்கதாய் அதிக அளவில் மிகப் பெரிய மீன்கள் அகப்பட்டன. அவை அனைத்தையும் படகில் ஏற்றுவதற்கு உதவி தேவைப்படும் அளவிற்கு வலை நிரம்பி வழிந்தது.

நான் ஒரு பெரிய அதிசயத்தைக் கண்டேன்! இயேசுவின் முன் மண்டியிட்டு, ஆண்டவருக்குப் பயந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து: “ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும்” என்றேன் (லூக்கா 5:8)

ஆனால் அவரோ, என்னை அவரைப் பின்தொடர்ந்து வரச் சொன்னார்!

நான் என் கடன்களிலிருந்து விடுபட்டது மட்டுமல்ல: நான் காண ஏங்கிக்கொண்டிருந்த மேசியா என்னைக் கண்டுபிடித்தார்.

என் பெயர் சீமோன் பேதுரு, யோனாவின் மகன், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டவன்.

பார்க்கவும்: அன்புள்ள நண்பரே, ஒருவேளை உன் குணாதிசயங்கள் அல்லது தவறான தீர்மானங்கள் உன்னை ஒரு கடினமான சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கலாம். இதனால் உன் ஊக்கம் குலைந்துபோய் இருக்கலாம். ஆனால் இன்று, உன் சூழ்நிலையை மாற்றவும், சாத்தியமற்றது என்று தோன்றும் பாதைகளைத் திறக்கவும் இயேசுவுக்கு வல்லமை உண்டு. இன்றே அவர் சமூகத்திற்கு வா, அவர் உன்னை விசாரிக்கிறவரானபடியால், உன் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடு (1 பேதுரு 5:7)

நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!