ஆண்டவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“…உமது முகத்தை எனக்கு மறையாதேயும், என் இரட்சிப்பின் தேவனே, என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (வேதாகமம், சங்கீதம் 27:9-10)
நான் சங்கீதம் 27வது அதிகாரத்தைத் தொடர்ந்து தியானம் செய்ய விரும்பியதற்கு இந்தப் பகுதிதான் முக்கியக் காரணம். இதைப் பற்றி இன்று உங்களுக்கு எழுதுவது என் இருதயத்தில் ஏற்கனவே இருந்த ஒரு விஷயம் ஆகும்.
உன் தந்தை அல்லது தாயால் நீ கைவிடப்படுவதை விட பரிதாபமான நிலை வேறென்ன இருக்க முடியும்?
சமீபத்தில், ஒரு இளம் பெண்… “என் அப்பா எனக்கு வாழ்க்கையில் கொடுத்தது நான் பிறக்க அளித்த ஒரு விந்தணுதான்” என்று இப்படியாகச் சொல்வதை நான் கேள்விப்பட்டேன்.
மிகவும் வருத்தமாக இருக்கிறது, இல்லையா? தங்கள் குழந்தைகளில் ஒன்றைக் கைவிட்ட, தவறாக நடத்திய அல்லது துஷ்பிரயோகம் செய்த தந்தைகளையோ அல்லது தாய்களையோ பற்றி என்ன சொல்வது?
நம்முடைய அனுபவங்களினால், “பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா” என்ற கற்பனை அடிக்கடி சிதைந்துவிடுகிறது. பலர் ஆண்டவரை ஒரு கொடூரமான தந்தையாக, ஆபத்தில் கூட இல்லாதவராக, அக்கறையற்றவராக, இரக்கம் இல்லாதவராக, அல்லது அதைவிட மோசமாக, நம்மைத் துன்பப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறவராக சித்தரிக்கிறார்கள்.
தாவீது, “என்னை விட்டு விலகாதேயும் என்னைக் கைவிடாதேயும்” என்று ஜெபித்தபோது, ஆண்டவரைப் பற்றி அவன் கொண்டிருந்த கற்பனை சாய்ந்தது போல இருந்தது.
ஆனால் உடனே அவன், ஆண்டவர் தனது பெற்றோரை விட வித்தியாசமானவர் என்பதை உணர்ந்து, “என் தந்தையும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னை சேர்த்துக்கொள்வார்” என்று கூறினான்.
உனக்குத் தெரிகிறதா? உன் தந்தையோ அல்லது தாயோ உன்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் உன்னைக் கைவிடமாட்டார். மாறாக, அவர் உன்னைத் தம் கரங்களில் அணைத்துக் கொள்வார். தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் நல்லவர். அவர் இரக்க குணமுள்ளவர். அது அவருடைய தெய்வீக சுபாவமாய் இருக்கிறது.
உன்னுடைய துன்பத்திற்கோ அல்லது அவரை விட்டு வெகு தொலைவில் வாழத் தேர்ந்தெடுத்த இந்த உலகத்தின் துன்பத்திற்கோ அவர் பொறுப்பல்ல. மாறாக, ஆண்டவர், உனது நல்ல தந்தை, அன்பின் கரங்களால் உன்னை அணைத்து, உன்னை ஆறுதல்படுத்தவும், உன்னை உயர்த்தவும், உன்னை ஊக்குவிக்கவும் விரும்புகிறார்.
இன்றைக்கான ஜெபம்: “பிதாவே, இப்போதும் என்னை உமது கரங்களில் பிடித்துக்கொண்டதற்காக நன்றி. எனது பூமிக்குரிய பெற்றோருடன் எனது அனுபவம் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, நீர் ஒரு நல்ல தந்தை. உம்மைப் பற்றிய எனது எண்ணங்களை சரி செய்யுமாறு உம்மிடம் கேட்டுக்கொள்கிறேன். நீர் என்னை ஒருபோதும் கைவிட மாட்டீர் என்று நான் நம்புகிறேன்! நன்றி. இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.”