அவருடைய பலத்தினால் உன் பலவீனத்தை மாற்றிக்கொள்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
நமது வேலைகளிலும், நட்பிலும், வீட்டிலும் நாம் சிறந்துவிளங்க விரும்புகிறோம். கர்த்தருக்கு ஊழியம் செய்யவும் நமது வார்த்தைகளாலும் செயல்களாலும் அவரைக் கனப்படுத்தவும், எப்போதும் ஜெபிக்கவும் நாம் விரும்புவதுண்டு. நமது வாழ்க்கையை முழுமையாகவும் வேகமாகவும் வாழ விரும்புகிறோம், ஆனால் சில நேரங்களில், நேரமும் ஆற்றலும் குறைவாக இருப்பதாலோ அல்லது பிற காரணங்களாலோ நம்மால் அவ்வாறு செயல்பட முடிவதில்லை.
ஒருவேளை இன்று நீ மனதளவில் சோர்ந்துபோய் இருக்கலாம் அல்லது விரக்தியடைந்திருக்கலாம். அப்படியிருப்பாயானால், இன்று உன்னை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.
வேதாகமம் சொல்கிறது, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்’’ (ஏசாயா 41:10)
இப்படிப்பட்ட பலவீனமான ஒரு நிலையில் நீ இருப்பதாக உணர்வாயானால், தேவ வல்லமையை அனுபவிக்க இதுவே சரியான நேரமாகும். அவருடைய பலத்தைப் பெறுவதற்கான தருணம் இதுவே. ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறும்போதும், வங்கிகள் அல்லது கடன் கொடுப்பவர்கள் உனக்குத் தர இயலாது என்று கூறும்போதும் தேவ பெலன் உன்னைப் பெலப்படுத்தும். ஆம்! எல்லாமே “ஜீவனற்றுப் போனதாக” தோன்றும்போது, ஆண்டவர் உன் சார்பாக மிக உறுதியாகப் பேசுவார், உனக்காக பலமாய் செயல்படுவார்.
ஆண்டவர் மீது நம்பிக்கை வை. உன் பலவீனம், உன் வருத்தம், உன் சோர்வு, உனது சந்தேகம், உன் பயம் ஆகியவற்றை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு, அவருடைய பெலத்தையும், மகிழ்ச்சியையும், திறனையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொள்! இந்த நாட்களில் அவர் உன்னுடன் இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து, எல்லாவற்றையும் பெற்றுக்கொள்!