ஆண்டவர் உனக்குச் செவி சாய்க்கிறார்.
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீ கிணற்றில் விழுந்துவிட்டால் என்ன செய்வாய்? நீ உன் கைகளை மேலே உயர்த்தி, உன் முழு பலத்துடன் உதவிக்காக அழுவாய் அல்லவா, அப்படித்தானே செய்வாய்?
அதைப்போலவே, ஆழம் இன்னதென்று கூறமுடியாத கண்ணுக்குத் தெரியாதிருக்கும் கிணறுபோல் தோன்றும் துன்பத்தில் இருக்கும்போது, நீ உதவி கோரி ஆண்டவரை அழைக்கலாம்… உன் கைகளை ஆண்டவருக்கு நேராக உயர்த்தி, உதவிக்காக அவரை அழைப்பாயாக.
உன்னை இரட்சிக்க அவர் தாமதிக்கமாட்டார். வேதாகமத்தில் நாம் இதை வாசிக்கிறோம்: “நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.” (சங்கீதம் 34:17)
நீ நீதிமானாய் இருக்கிறாயா? நீ ஆண்டவரை நோக்கிக் கதறிக் கூப்பிட்டால் அவர் உனக்குச் செவி சாய்ப்பாரா? ஆம், நீ ஒரு நீதிமான் தான், ஏனென்றால் இயேசு உனக்காக சிலுவையில் மரித்தார். அவருடைய இரத்தம் உன்னை நீதிக்குள்ளாக்குகிறது… வேறுவிதமாகக் கூறினால், உன்னை நீதிமானாக்குகிறது என்று நீ நம்புகிறாய். ஆம், நீ ஆண்டவருடைய பிள்ளையாக இருப்பதால், அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் உனக்குச் செவிசாய்ப்பார்.
கிறிஸ்து இயேசுவுக்குள் நீ தேவனுடைய நீதியாக இருப்பதால், நீ ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் உனக்குச் செவிசாய்த்து, உன் எல்லா கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறார்.
நீ விரும்பினால், இப்போது என்னுடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா… “ஆண்டவரே, என்னை அறிந்திருக்கிறீர், நான் கடந்துசெல்லும் பாதை அனைத்தையும் அறிந்திருக்கிறீரே… எனது துயரம் எனும் கிணற்றின் ஆழம், அகலம், ஆகியவற்றைப் பார்க்கிறீர். இன்று நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன். நீர் என் வாழ்வில் இடைபடுமாறு மன்றாடுகிறேன்! இந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து என்னை வெளியே கொண்டுவாரும் (உன் சூழ்நிலையை பட்டியலிடு). நான் வழுவாமல் உறுதியாக இருக்கும்படி என் கால்களைக் கற்பாறையின் மீது நிறுத்துவீராக. என்னை அலைக்கழித்த, சந்தேகம், பயம் போன்றவை இனி என் வாழ்வில் வேண்டாம்! ஆண்டவரே, நான் உம்மில் திடமாகவும், உறுதியாகவும், பலமாகவும் இருப்பேன். இயேசுவின் வல்லமை வாய்ந்த நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”