நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை!
முகப்பு ›› அற்புதங்கள் ››
“இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையும் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.” (வேதாகமத்தில் யோவான் 8:10-11ஐப் பார்க்கவும்)
“விபச்சாரப் பெண்ணின்” கதை என்று அறியப்படும் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில், அது ஒரு பயங்கரமான பாவத்தைப் பற்றிப் பேசுவதை விட இயேசுவின் இரக்க குணத்தைப் பற்றியே அதிகம் பேசுவதை நான் பார்க்கிறேன். இயேசுவின் வார்த்தைகளில் அவருடைய அன்பை நம்மால் உணர முடிகிறது.
இந்த ஸ்திரீ விபச்சாரத்தில் ஈடுபட்டதால் கையும் களவுமாகப் பிடிபட்டாள். இயேசுவின் காலத்தில், ஆசாரியர்கள் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாய் இந்த ஸ்திரீயைக் கல்லெறிந்து கொன்றிருப்பார்கள்.
ஆனால் இயேசுவோ முற்றிலும் வேறொரு சட்டத்தை அங்கு கொண்டுவந்தார். ஒரு புதிய கட்டளையைப் பிறப்பித்தார். ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார்… அதுதான் கிருபை எனும் உடன்படிக்கை!
இயேசு இந்த ஸ்திரீயை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் அவளிடம் அன்பாக இருக்கிறார். அவள் மீது குற்றம் சாட்டுபவர்களிடமிருந்து அவளைப் பாதுகாக்கிறார். அவளது கரத்தைப் பிடித்து அவளைத் தூக்கிவிடுகிறார். ஆண்டவர் அவளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லை என்ற நிச்சயத்தை அவளுக்குக் கொடுக்கிறார். ஆண்டவர் அவளை நேசிக்கிறார் என்பதை அவளுக்கு வெளிப்படுத்தி, அவளுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கிறார்.
ஆண்டவர் அதே அன்புடன் உன்னையும் நேசிக்கிறார். நீ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு அவர் தம்முடைய குமாரனின் இரத்தத்தையே விலைக்கிரயமாகக் கொடுத்துவிட்டார். நீ விழும்போது, அவர் உன்னைத் தூக்கி நிறுத்துகிறார்… ஆம், உன்னையும் கூட அவர் தூக்கி நிறுத்துகிறார்! அவர் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை; மாறாக, கிருபையும் அன்பும் கொண்ட தம்முடைய கரத்தை உனக்கு நீட்டுகிறார்.
என் நண்பனே / தோழியே, உன்மீது குற்றம் சாட்டும்படியாக சத்துரு உனக்கு விரோதமாக வரும்போது, இயேசு உன்னைப் பார்த்து: உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை” என்று சொல்வதைக் கேள்.
எல்லாக் குற்றச்சாட்டிற்கும் நீங்கலாகியிரு. நீ விடுவிக்கப்பட்டிருக்கிறாய்! மெய்யாகவே விடுவிக்கப்பட்டிருக்கிறாய்!