நீ அழைக்கப்பட்டிருக்கிறாயா அல்லது தகுதியுள்ள நபராய் இருக்கிறாயா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஆண்டவர் உன்னை ஒரு காரியம் செய்ய அழைப்பதை நீ எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? “அது சாத்தியமற்றது! என்னால் அதைச் செய்ய முடியாது, ஆண்டவரே, நீர் தவறான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறாயா?
கேம்ரனாகிய நான் பல ஆண்டுகளுக்கு முன்பு, மக்களுக்காக ஹிந்தியில் நல்ல ஆராதனைப் பாடல்கள் எழுதப்பட வேண்டும் என்ற தாகமுள்ளவனாய் ஆண்டவரிடத்தில் ஜெபித்தபோது, “அப்படியென்றால் நீயே ஏன் அது போன்ற நல்ல ஆராதனைப் பாடல்களை எழுதுவதைப் பற்றி யோசிக்கக் கூடாது?” என்ற ஆண்டவருடைய குரல் எனக்குக் கேட்டது.
“ஆண்டவரே, உம் வழிகளிலெல்லாம் நீர் சரியானவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீர் தவறு செய்வது இதுவே முதல் முறையாகும். நீர் தவறான நபரைத் தேர்ந்தெடுக்கிறீர்” என்பதே என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. ஆனால் நான் கீழ்ப்படிந்தேன், இது யெஷுவா ஊழியங்களைத் தொடங்க வழிவகுத்தது.
அதிர்ஷ்டவசமாக, இப்படிச் சொல்வது நான் மட்டுமல்லை. யாத்திராகமம் 3ஆம் அத்தியாயத்தில் பற்றியெரியும் ஒரு முட்செடியிலிருந்து ஆண்டவர் மோசேயை அழைக்கிறார். இதைப் புரிந்துகொள்வது மோசேக்குக் கடினமாகத்தான் இருந்தது, ஆனாலும் மோசே ஆண்டவரிடத்தில், “பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்?” என்று கேட்கிறார். (யாத்திராகமம் 3:11)
இதேபோல், 2016 ஆம் ஆண்டில், இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான ஆண்டவரும் அதிசயங்களின் தேவனுமாய் இருப்பவரை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக தினசரி மின்னஞ்சலை எழுத, பிரெஞ்சு போதகரும் இணையதள சுவிசேஷகருமான எரிக் செலேரியரை ஆண்டவர் அழைத்தார். அவரது ஆரம்ப பதில் மறுப்பு தெரிவிப்பதற்கான பட்டியலாகவே இருந்தது: “நான் ஒரு எழுத்தாளர் அல்ல,” “நீண்ட காலமாக ஒரே காரியத்தைச் செய்வது எனக்கு ஏற்ற வேலை அல்ல” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இறுதியில், அவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்தார், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் பிறந்தது. இது பின்னர் Jesus.net ஊழியத்தின் மூலமாக இன்று (https://jesus.net/) உலகம் முழுவதும் 23 மொழிகளில் அநேக மக்களைச் சென்றடைகிறது.
“நான் தகுதிபெற்றவனாகவோ அல்லது திறமையுள்ளவனாகவோ இல்லை, நான் அழைக்கப்பட்டவனாய் இருந்தேன்” என்று எரிக் கூறுகிறார்.
ஆண்டவர் தகுதியுள்ளவர்களாய் இருப்பவர்களை அழைப்பதில்லை; அவர் அழைப்பவர்களைத் தகுதியுடையவர்களாக்குகிறார்!
ஆண்டவர் உன்னையும் அழைக்கிறார். நாளை அதைப் பற்றி நாம் இன்னும் அதிகமாக தியானிப்போம், ஆனால் அந்த அழைப்பு இன்றிலிருந்து தொடங்குகிறது.
எங்களுடன் சேர்ந்து ஜெபிப்பாயா?: “ஆண்டவரே, நீர் என்னை என்ன செய்வதற்காக அழைத்தாலும், நான் உமது ஏற்பாடுகளுக்குக் கீழ்படிகிறேன். உமது ராஜ்யத்திற்காக நீர் என்னைப் பயன்படுத்துவீராக, ஆமென்!”