ஒப்புரவாக்குதலே ஆண்டவருடைய திட்டம்! 💞
முகப்பு ›› அற்புதங்கள் ››
இந்த வாரம் “சமாதானம் மற்றும் மன்னிப்புக்கான பாதை” என்ற தலைப்பை அடிப்படையாகக் கொண்ட தொடரை நாம் தியானிக்கப் போகிறோம்.
ஒப்புரவாக்குதல் மனிதகுலத்திற்கான ஆண்டவருடைய மிகப்பெரிய திட்டம் என்பது உனக்குத் தெரியுமா? ஆண்டவர் உறவுகளுக்கு முக்கியத்துவத்தை வழங்குகிறார். நீ ஆண்டவருடனும் உன் குடும்பம் மற்றும் உனக்கு அன்பானவர்களுடனும் நட்புடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இயேசு இந்தச் செய்தியின் சாராம்சத்திற்கேற்ப மிகச்சரியாக வாழ்ந்து காட்டினார்: அவர் தம் தந்தைக்கு நெருக்கமாக இருந்தார். அவர் எப்போதும் உறவினரின் மத்தியில் இருந்தார். உறவென்னும் வட்டத்துக்குள் பொருந்தாதவர்களையும், முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டவர்களையும் அவர் நெருங்கிச் சென்றார்.
நாம் ஆண்டவருடனும் மற்றவர்களுடனும் நமது உறவைப் பேண ஒப்புரவாகுதல் உதவுகின்றது.
ஆண்டவருடனோ அல்லது மற்றவர்களுடனோ உன் உறவைத் தடுக்கும் ஏதேனும் உள்ளதா? அப்படியானால், அதை அவருடைய பாதத்தில் கொண்டு வர உன்னை அழைக்கிறேன். உன்னால் முடியாததை, உன் தடைகள் அனைத்தையும் அவரால் தகர்க்க முடியும். ஏனெனில் அவை அவரால் முடியாதவைகள் அல்லவே.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவான் 13:34)
ஒப்புரவாக்குதல் என்பது மிகக் கடினமான வேலை. மற்றவர்களை உண்மையிலேயே நேசிக்கும் உன் திறன் உனக்குள் இருக்கும் ஆண்டவருடைய அன்பிலிருந்து பாய்கிறது.
முதலில் உன் இதயத்தை முழுமையாக மீட்டெடுக்கக்கூடியவருக்கு அருகில் நீ வருவதன் மூலம், உனக்குக் கடினமாகத் தோன்றும் உறவுகளை சமாதானத்தால் நிரம்பிய உறவுகளாக நீ மாற்றலாம்.
என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கும்படி உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, நான் உமது இருதயத்தைப் பிரியப்படுத்த விரும்புகிறேன், உமது சித்தத்தைச் செய்யவும், எப்போதும் உம்மில் அதிகமாக வளரவும் விரும்புகிறேன். மனம்பொருந்தி ஒப்புரவாகவும், மன்னிக்கவும், உண்மையாக நேசிக்கவும் உமது கிருபையைப் பெற நாடுகிறேன். ஆண்டவரே, இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒப்பரவாக்கும் ஊழியத்தை என் வாழ்வில் நிறைவேற்றுவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எனது கணவரும் நானும் பிரிந்த பின்னர், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ தேவ செய்திகளைக் கண்டுபிடித்தேன். என்னுடைய இருண்ட நாட்களில் இது ஊக்கமளிப்பதாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் இருந்தது. அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தத்தினால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் பயணம் மிகவும் கடினமானது, ஆனால் ஆண்டவருக்கு எதுவும் கடினமானது இல்லை என்று எனக்குத் தெரியும். அவர் எனக்கு உதவி செய்கிறார்.” (ஆண்டிரியா, ராஜபாளையம்)