என் சிறிய கண்களால் நான் உளவு பார்க்கிறேன்… 👀
முகப்பு ›› அற்புதங்கள் ››
உன் நாவு மற்றும் விரல்களைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்பதிலிருந்து நான் இந்தத் தொடரைத் தொடங்கினேன் – உன் வாயால் நீ என்ன பேசுகிறாய் மற்றும் நீ தட்டச்சு செய்யும் வார்த்தைகள் என்ன?
இன்று, சரீரத்தின் மற்றொரு அவயவத்தைப் பற்றிப் பார்ப்போம்: உன் கண்களைக் கட்டுப்படுத்துதல்.
நாம் பார்க்கக்கூடாத விஷயங்களைப் பார்ப்பதால், பல பிரச்சனைகள் எழும்பி, நமக்குள் எல்லை மீறும் எண்ணங்களுக்கு அது வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, உன் நண்பரின் புத்தம் புதிய ஒரு கேஜெட்டை நீ பார்க்கும்பொழுது, உனக்குள் பொறாமை எழுகிறது.
“சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 14:30)
ஒரு கவர்ச்சிகரமான நபரையோ அல்லது முறைகேடான படங்களையோ நீ ஆன்லைனில் பார்க்கிறாய் என்று வைத்துக்கொள், நீ உணரும் முன்பே, உன் மனம் இச்சையான எண்ணங்களால் நிரம்பிவிடும்:
“உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.” (நீதிமொழிகள் 6:25)
நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அது நம் எண்ணங்களைத் தாக்குகிறது மற்றும் இறுதியில் அது நாம் செய்யும் செயல்களைப் பாதிக்கிறது. உதாரணமாக, வன்முறையைத் தூண்டும் திரைப்படங்களைப் பார்ப்பது, உன் பேச்சிலும் செயல்களிலும் ஆக்ரோஷத்தைப் பிறப்பிக்கும்.
நம் கண்களால் நம் ஆத்துமாவை போஷிக்கிறோம்.
உன் கண்களைக் கட்டுப்படுத்துவதற்கு பயிற்சி தேவைப்படும், மற்றும் அது சுய கட்டுப்பாட்டிற்கான ஒரு துவக்கமாக இருக்கும். சுவர்கள் இல்லாத நகரம் பாதுகாப்பற்றதுபோல, சுயக்கட்டுப்பாடு இல்லாத நிலை உன்னை பாதிப்புக்குள்ளாக்கிவிடும். “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.” (நீதிமொழிகள் 25:28)
யோசேப்பு பாவ வலைக்குள் இழுப்புண்டபோது, அவன் அதிலிருந்து தப்பி ஓடிவிட்டான் என்ற வேதாகம சம்பவம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று – யோசேப்பு அங்கிருந்து ஓடிவிட்டான், அவன் அந்த வீட்டை விட்டு வெளியே ஓடியபோது, தன் மேலங்கியை அந்த ஸ்திரீயின் கையில் விட்டுவிட்டு ஓடினான். (ஆதியாகமம் 39:12)
“என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என்று யோபு உறுதியாய் இருந்தார். (யோபு 31:1)
எல்லா நேரங்களிலும் நீ தவறான காரியங்களைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு சாத்தியமல்ல என்றாலும், நீ மீண்டும் அதைப் பார்க்க வேண்டுமா அல்லது பார்க்காமல் விலகிச் செல்ல வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது உன் கரத்தில் தான் இருக்கிறது. யோபுவைப் போலவே, நீயும் உன் கண்களுடன் உடன்படிக்கை செய்யலாம்.
அதிர்ஷ்டவசமாக, நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் நம்மைச் சுற்றி மகத்தான அழகை உருவாக்கிய ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்கிறோம்; ஒரு அழகான சூரிய அஸ்தமனம் முதல் ஒரு சிறிய மலர் வரை, நாம் பேரழகு மிக்க காட்சிகளால் சூழப்பட்டுள்ளோம்.
ஆண்டவரால் உருவாக்கப்பட்ட அழகான விஷயத்தைப் பார்த்து, வியப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்க இன்றே சிறிது நேரம் ஒதுக்குவாயாக. உன்னைச் சுற்றியுள்ள அழகான காட்சிகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவாயாக!