உன் சந்தேகங்களுக்கு இடமளிக்காதே!
முகப்பு ›› அற்புதங்கள் ››
சில சமயங்களில், “ஆண்டவர் உண்மையிலேயே என் மீது அக்கறை காட்டுகிறாரா? ஒரு கட்டத்தில் அவர் என்னைக் கைவிட்டு விடுவாரா? மீண்டும் ஒருமுறை அவர் எனக்கு உண்மையுள்ளவராக இருக்கப்போகிறாரா?” என்று சொல்லி இப்படிப்பட்ட சந்தேகம் நிறைந்த அநேக கேள்விகள் எல்லோரையும் போலவே, உனக்குள்ளும் எழலாம்.
சந்தேகம் வருவது இயற்கையான ஒன்று. அது மனித சுபாவம்தான். அதற்காக ஆண்டவர் உன்னை ஆக்கினைக்கு உட்படுத்துகிறாரா? அப்படிச் செய்யமாட்டார். உனது சந்தேகங்கள் ஆண்டவருக்கு ஒரு பொருட்டல்ல. அவைகள் மனித சுபாவத்தின் ஒரு பகுதி. இயேசு மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக இவ்வுலகில் இருந்தபோது, அவரோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த சீஷர்கள் கூட ஒரு சில நேரங்களில் அவரை சந்தேகித்தனர். ஒரு கட்டத்தில் இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று பேதுரு உறுதியாக அறிவித்தார், (மத்தேயு 16:16) ஆனாலும் அதற்கு முன்பு சந்தேகப்பட்டு தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். (மத்தேயு 14:31)
இன்று நீ கீழ்க்காண்பவைகளை நினைவில் கொள்வாயாக:
- உன் சந்தேகங்கள் ஆண்டவருக்கு ஒரு பொருட்டல்ல… அவற்றை நீ அவரிடம் ஒப்படைத்து விடு. உன் சந்தேகங்களை நீ உனக்குள்ளேயே வைத்துக்கொள்ளாதே. அவைகளை மனதினுள் வைத்திருப்பதால், உன் மனதிற்குள் அவை மீண்டும் சுற்றிக்கொண்டிருக்க நீ அனுமதிக்கிறாய். ஆனால் நீ அவற்றை ஆண்டவரது கரத்தில் விட்டுவிடும்போது, சகல தாக்கத்தையும், எல்லா வல்லமையையும் நீ அவரிடம் விட்டுவிடுகிறாய்.
- உன் சந்தேகங்களின் தொனியை உனக்குள் அனுமதிக்காதே. ஆண்டவர் பேசட்டும்! உனக்கு எப்படி உறுதியளிப்பது என்பதும் உன் இருதயத்தில் எப்படி சமாதானத்தை வைப்பது என்றும் அவருக்குத் தெரியும். இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று: “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.” (ஏசாயா 26:4)
- இனி சந்தேகங்களுக்கு நீ இடமளிக்க வேண்டாம்!
இன்று சந்தேகப்படாமல் ஆண்டவரை நம்புவாயாக என்று உன்னை ஊக்குவிக்கிறேன். இன்று கிறிஸ்துவை சார்ந்துகொள். நித்திய கன்மலையாகிய கிறிஸ்துவை நினைத்து வாழ். திடமான அஸ்திபாரமாகவும் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இருப்பவராகிய கிறிஸ்துவே உனக்குத் தேவையான சமாதானத்தையும் மன அமைதியையும் தருவாராக. உன் சந்தேகங்கள் யாவும் அவர் முன் விலகி ஓடிப்போகின்றன!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “சகோதரர் எரிக், ஊக்கமளிக்கும் சாட்சிகளை எனக்கு அனுப்புவதற்கு மிக்க நன்றி. நான் விசுவாசத்தில் வளர விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஆண்டவருக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்க விரும்புகிறேன். இன்று, என் வாழ்க்கை முன்பைவிட எவ்வளவோ நன்றாக இருக்கிறது. ஆண்டவருக்கும் உங்கள் ஊழியத்திற்கும் நன்றி செலுத்துகிறேன். ஆனால் சில நேரங்களில் ஏதோ ஓரிடத்தில் நான் இன்னும் சந்தேகங்களை எதிர்கொள்கிறேன். இருப்பினும், நான் இயேசுவிடமிருந்து இன்னும். ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறேன், எல்லா நேரங்களிலும் மன்னிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்குத் தேவையானது விசுவாசத்தின் ஒரு பெரிய அடி மட்டுமே… உங்கள் தினசரி செய்திகளுக்கு மிக்க நன்றி. உங்கள் அற்புதமான செய்திகளை கடந்த 6 மாதங்களாகப் பெற்று பயனடைந்து வருகிறேன். உங்கள் ஊழியத்தையும், அதில் பணிபுரியும் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.” (சுமேஷ்)