உனது முதல் எதிர்வினை எப்படி இருக்கும்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நடந்த ஒரு சம்பவம் நம் மனதை மிகவும் பாதிக்கும்போது (வியாதிப்படுக்கையில் உள்ள நமக்கு அன்பானவர், தவறான காரணங்களுக்காக நமக்கு எதிராகத் திரும்பிய நண்பர், நமது அமைதியான அன்றாட வாழ்வை சீர்குலைத்த பேரழிவு போன்றவை), நமது முதல் எதிர்வினை இப்படித்தான் இருக்கும்: “ஏதாவது செய்”…” நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும்!” என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்வாய்.
ஒரு வாசகர் இதை என்னுடன் பகிர்ந்துகொண்டார்: “எனது மிகப்பெரிய போராட்டம் என்னவென்றால், மனதில் இரண்டாவது திட்டம் இல்லாமல் எனது முதல் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று ஆண்டவரை விசுவாசிப்பதுதான். உண்மையிலேயே என் இருதயத்தின் ஆழத்தில் நிறைய பயங்கள் புதைந்திருக்கும்போது விசுவாசிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.”
ஆண்டவரிடம் எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிடுவதும், அவரை விசுவாசிப்பதும் சாதாரணமான ஒரு விஷயமோ அல்லது எளிதானதோ அல்ல என்பது உண்மைதான். இருப்பினும், எல்லா நேரங்களிலும் நீ செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், உன்னை முழுவதுமாக தேவனிடத்தில் ஒப்படைப்பதாகும். ஏனென்றால், “அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்” என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. (ஏசாயா 30:15)
ஆண்டவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி, அவருடைய சமூகத்தில் அமர்ந்து அவரை விசுவாசிப்பதைத் தேர்ந்தெடுப்பதாகும். நீ இப்படி விசுவாசிப்பதைத் தேர்ந்தெடுக்கும்போது, உன் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும், நீ கவலைப்படும் உனக்கு அன்பானவரைக் கவனித்துக்கொள்வதற்குமான பொறுப்பை ஆண்டவரிடத்தில் விட்டுவிடுகிறாய். அவ்வாறு கவனித்துக்கொள்வதற்கு ஆண்டவரை விட சிறந்தவர் யார் இருக்கக் கூடும்?
ஆண்டவருடைய வார்த்தையை வாசிக்கவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும் தனிமையில் நேரத்தைச் செலவிடுவதால், “நீ எதுவும் செய்யவில்லை” என்ற எண்ணத்தை அது உனக்கு ஏற்படுத்தக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் அதுதான் அதற்கான வழியாகும்: இப்படிச் செய்வதால், ஆண்டவர் “ஏதாவது செய்யும்படி” கிரியை செய்யும்படி நீ அவருக்கு இடமளிக்கிறாய். நீயும் நானும் செய்யக்கூடிய காரியமான மற்ற “எல்லாவற்றையும்” விட இந்த “ஏதாவது செய்தல்” எப்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
நீ இப்போது கடினமான காலங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறாய் என்றால், நான் உனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்… “ஆண்டவரே, என்னை விட உமக்கு இந்த நபரை நன்றாகத் தெரியும். இவரது இருதயத்தையும் வாழ்க்கையையும் மற்றும் உணர்ச்சிகளையும் நீர் நன்கு அறிவீர். நான் இவரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன், பிதாவே, இவர் எங்கிருந்தாலும் இவரை இப்போதே ஆசீர்வதித்து சந்திக்குமாறு மன்றாடுகிறேன். நான் இவருடைய நிலைமையை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். ஆண்டவரே, நீர் கிரியை செய்வீர் என்றும், குணப்படுத்துவீர் என்றும், விடுவிப்பீர் என்றும் மற்றும் உயர்த்துவீர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”
