உதாரத்துவமாக வழங்கப்பட்ட நற்செய்தி!
முகப்பு ›› அற்புதங்கள் ››
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட இந்த முக்கியமான வசனம் சாட்சியளிப்பதுபோல், எல்லாவற்றிற்கும் மேலாக, நற்செய்தியானது அன்பினால் உண்டான ஒரு விலையேறப்பெற்ற பரிசாக இருக்கிறது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16)
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது: “பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்..” (2 கொரிந்தியர் 9:6)
ஊழியத்தில் உதாரத்துவமாக இருக்கவும், மிஷனரிகள், போதகர்கள் மற்றும் திருச்சபைகளை ஆதரிக்கவும் ஆண்டவர் (எனக்கும் என் மனைவிக்கும்) கற்றுக்கொடுத்தார் … சுருக்கமாகச் சொன்னால், ஆண்டவரது ராஜ்யத்தின் வளர்ச்சிக்காகக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். நான் பெருமையில்லாமல் இதைச் சொல்கிறேன்; கொடுக்கும் அளவிற்குப் பெருந்தன்மை இயல்பாகவே எனக்கு இல்லாததால், அதைக் கற்றுக்கொள்வது சில நேரங்களில் வலிமிகுந்ததாக இருந்தது.
இயற்கை ஒரு அற்புதமான ஆசிரியர்: ஒரு விவசாயி எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்ய முடியும். நிதி சம்பந்தப்பட்ட விஷயத்திலும் அப்படித்தான் என்று வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. உன் பணத்தை விதைக்க வேண்டும் என்பது உனக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் அதை சரியான விதத்தில், சரியான இடத்தில், சரியான இருதயத்துடன் விதைத்தால், அது நிச்சயம் பலன் தரும்!
நான் பலமுறை இதை அனுபவித்திருக்கிறேன்; அவைகளை என்னால் கணக்கிட இயலாது! ஆண்டவர் ஒரு சட்டத்தை நிறுவியிருக்கும்போது, அது நிச்சயம் பலன் தரும்… காலதாமதம் ஆனாலும் அது நிறைவேறும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். ஒரு பொருளைத் தவறவிடும்போது, அது தரையில் விழும் என்பதை அறிய, நான் புவியீர்ப்பு விசை விதியைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. புவியீர்ப்பு விசை என்பது ஒரு விதியாகும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம் என்ற விதியைப்போலவே அதுவும் ஒரு விதியாகும்.
நீ ஆண்டவருக்குக் கொடுக்கும்போது, நீ அவருக்குக் கொடுத்ததை இழந்துபோகமாட்டாய். நீ அவருடைய வயலில் விதைக்கிறாய்! ஒரு நாள், நீ விதைத்ததை ஏதோ ஒரு வழியில் அறுவடை செய்வாய்… ஆண்டவர் யாருக்கும் கடனாளி இல்லை, வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் அவருடையவைகள். (யோபு 41:11)
நாம் ஆண்டவருக்குக் கொடுக்கும் காணிக்கையானது உதாரத்துவமாக கொடுக்கப்பட வேண்டும்… வேறுவிதமாகக் கூற வேண்டுமானால், ஆண்டவருக்காகவும் நேர்மையான இருதயத்துடனும் நாம் கொடுக்க வேண்டும், விசனத்துடனோ அல்லது திருப்பிக் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தேவைக்காகவோ கொடுக்கக் கூடாது. (2 கொரிந்தியர் 9:7)
இன்று, ஆண்டவருடைய உதாரத்துவமான குணத்துக்கு நாம் நன்றி செலுத்துவோம். அவருடைய உதாரத்துவமான குணத்தை நம் மூலம் வெளிப்படுத்தும்படி கேட்போம்!
ஆண்டவரின் அளவற்ற அன்பை விவரிக்கும் இந்த அழகான பாடலைக் கேட்டு, நாம் அவரை ஆராதிப்போம்! https://youtu.be/D_IewcoGeEA?si=8fMuy1JWTrrY7lzJ