நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன்

“The Chosen” (“தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்”) என்ற தொடரை சார்ந்த அதிசயங்களை இன்று துவங்குகிறோம்.

‘The Chosen’ தொடரில் உள்ள மாறுபட்ட மற்றும் நம் வாழ்வோடு சம்பந்தபடுத்திக்கொள்ளக்கூடிய ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உன்னுடன் நேரடியாக பேசுவதைப் போல எழுதியுள்ளேன். அவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்!

நாள் 1:

உன் பெயர் என்ன? மக்கள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வியாக இதை எதிர்பார்க்கலாம். என் விஷயத்தில், எப்பொழுதும் இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது கடினமான ஒன்றே.

எல்லோரும் என்னை லில்லி என்று அறிந்திருந்தார்கள், ஆனால் எனது உண்மையான பெயர் மேரி. ஆம், மேரி, கெனசரேத்து ஏரிக்கரையில் அமைந்துள்ள மகதலேனா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவள்.

உண்மை என்னவென்றால், என் வாழ்க்கையில் என் பெயர் மட்டுமே குழப்பமான விஷயம் அல்ல. பல முறை என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை என நான் உணர்ந்த கலங்கலான ஞாபகங்கள் என் நினைவில் இருக்கிறது. ஏதோ இருள் என்னை ஆட்கொண்டு, என்னைச் சுற்றியிருப்பவர்களும் கூட அதைக் கண்டு பயப்படுவதை என்னால் பார்க்க முடிந்தது.

அந்த இருளுக்கு எதிராக நான் பல வருடங்கள் போராடினேன், ஆனால், அதன் பிடியிலிருந்து விடுபட என்னால் முடியவில்லை. நான் எல்லா நம்பிக்கையையும் இழந்ததால், இந்த வலியை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டுவர விரும்பினேன்.

நான் அவரை அந்தத் தருணத்தில்தான் முதன்முதலில் பார்த்தேன். இயேசு என்னை சந்திக்க வந்திருந்தார். அவரில் ஏதோ ஒரு சிறப்பு மாண்பு இருந்தது, ஆனால், குழப்பத்தின் காரணத்தால் நான் அவரை விட்டு விலகி செல்ல முயன்றேன்.

நான் விலகி நடந்து செல்லும்போது, ​​அவர் என்னை “மகதலேனாவின் மரியாள்” என்று அழைப்பதைக் கேட்டேன். அவருக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? அடுத்து நடந்ததை உண்மையாக என்னால் நம்பமுடியவில்லை: அவர் என்னிடம் வேத வசனத்தின் மூலம் பேசினார்! அவர் என்னிடம்: “உன்னை சிருஷ்டித்தவரும் உன்னை உருவாக்கியவருமாகிய நான் கூறுவது இதுவே: பயப்படாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன். நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவள்” என்று சொன்னார் (ஏசாயா 43:1).

என் தந்தை சிறுவயதில் இதே வசனத்தை என்னிடம் வாசிப்பார், ஆனால் இயேசு என்னிடம் சொன்னபோது, கடவுள் என்னுடன் பேசுவது போன்றும், அந்த வார்த்தைகள் உயிர் பெற்றது போன்றும் உணர்ந்தேன்… அவர் என் தலையை தன் கைகளில் பிடித்தபோது இருள் நிஜமாகவே என் வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதை என்னால் உணர முடிந்தது. நான் மீண்டுவிட்டேன்…

நான் தேவனுடைய மகள் என்றும் அவர் என் பெயரை அறிவார் என்றும் இப்போது எனக்குத் தெரியும்.

என் பெயர் மக்தலேனா மரியாள், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டவள்.

குறிப்பு: அன்பான நண்பரே, மரியாளைப் போல் உன் வாழ்வில் நீ மறக்கப்பட்டதாகவோ, குழப்பமடைந்ததாகவோ அல்லது இருளில் தொலைந்துவிட்டதாகவோ உணரும் நேரங்கள் வந்திருக்கலாம். ஆனால் அந்தத் தருணங்களில், ஒன்றை மறந்துவிடாதே: ஆண்டவர் உன்னை பெயரோடு அறிவார்… நீ அவருடையவன்/ அவருடையவள்! உன் பக்கத்தில் அவர் இருப்பதால், நீ எந்நாளும் பயப்பட வேண்டியதில்லை. இயேசு தம்முடைய ஒளியை மனுக்குலத்திற்கு கொண்டுவர உலகத்திற்கு வந்தார், அவருடைய ஒளி இருளை அறவே விரட்டியடித்து மேற்கொள்ளும்… இன்று அவருடைய ஒளியால் உன்னை நிரப்பு, மற்றவர்களுடன் ஒளியின் சிறப்பைப் பகிர்ந்து கொள்.

நீ ஒரு அற்புதமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!